Friday, March 11, 2011

தமிழக கட்சிகளுக்குப் பெரும் தலைவலியாகியுள்ள தொகுதி மறு சீரமைப்பு

தமிழக கட்சிகளுக்குப் பெரும் தலைவலியாகியுள்ள தொகுதி மறு சீரமைப்பு

சென்னை: திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த முறை இருந்த பல தொகுதிகள் இந்த முறை இல்லாததால், தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்துள்ளன இக்கட்சிகள்.


முக்கியமாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி மறு சீரமைப்பால் பெரும் தர்மசங்கடமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை 48 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை அதற்கு 63 இடங்கள் கிடைத்துள்ளன. அதாவது கூடுதலாக 15 சீட்கள் கிடைத்துள்ளன. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை அப்படியே தருமாறும், புதிய 15 தொகுதிகளில் தங்களுக்கு சாதகமானதைத் தருமாறும் அது திமுகவிடம் கோரியுள்ளது.

இங்குதான் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகளில் பல மாறியுள்ளது. அவற்றில் பல கடந்த முறை திமுக போட்டியிட்ட தொகுதிகளுடன் இணைந்துள்ளது. அல்லது கூட்டணியைச் சேர்ந்த வேறு கட்சிகளின் தொகுதிகளுக்குப் போய் விட்டது. இதனால் இந்தத் தொகுதிகளை எப்படி காங்கிரஸுக்கு ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பழைய தொகுதிகள் மாறிப் போயிருப்பதால், அதற்குப் பதில் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளை கேட்கிறது காங்கிரஸ். இதற்கு திமுக ஆட்சேபனை தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் தொகுதிகளை கண்டறிவதில் குழப்பமும்,சிக்கலும் நீடிப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகளில், 7 தொகுதிகள்தான் மாறிப் போயுள்ளன. இவற்றுக்குப் பதிலாக ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்துதான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. மேலும் பள்ளிப்பட்டு, சேரன்மாதேவி, சாத்தான்குளம், கோவை மேற்கு ஆகிய புதிய தொகுதிகளையும் காங்கிரஸ் கோருகிறது.

திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் அதற்குத் தொகுதிகளை கொடுத்து விட்டுத்தான் மற்ற கட்சிகளுக்குப் போக வேண்டிய நிலையில் திமுக உள்ளது. ஏற்கனவே சீட் ஒதுக்கீட்டில் பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் முதலிலேயே சீட் ஒதுக்கியதால் திமுக மீது கோபத்தில் உள்ளது காங்கிரஸ். அதை சமாதானம் செய்து கொண்டு வருவதற்குள் திமுகவுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. எனவே தொகுதிகளை ஒதுக்குவதில் முதலில் காங்கிரஸ் விவகாரத்தை முடித்து விட்டு பின்னர் மற்ற கட்சிகளுக்குப் போக திமுக தீர்மானித்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகள் இருப்பது போல பார்த்துக் கொள்வதாகவும் திமுக உறுதியளித்துள்ளதாம். இது காங்கிரஸை சற்று சமாதானப்படுத்தக் கூடும் என்று திமுக நம்புகிறது.

Tnks Thatstamil

No comments:

Post a Comment