Friday, March 11, 2011

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை: குஜராத் போலீஸிற்கெதிராக மேலும் ஆதாரங்கள்

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை: குஜராத் போலீஸிற்கெதிராக மேலும் ஆதாரங்கள்

அஹ்மதாபாத்,மார்ச்.11:இஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் இளம்பெண் உள்பட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குஜராத் போலீசாருக்கெதிராக மேலும் ஆதாரங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் சிக்கியுள்ளன.

அஹ்மதாபாத்தில் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்கும், சில முக்கிய புகைப்படங்களும் குஜராத் போலீசாரின் கொடூரங்களை சித்தரிக்கும் முக்கிய ஆதாரங்களாகும்.

ஃபாரன்சிக் சயன்ஸ் லேப் முன்பு புலனாய்வு குழுவினருக்கு வழங்க மறுத்த அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களும், புகைப்படங்களும் ஐ.ஜி சதீஷ் வர்மா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைப்பற்றப்பட்டன. இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேரும் மிக அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதை நிரூபிக்கும் ஆதாரங்களாகும் இவை.

நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இரத்த வெள்ளமாக கிடந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு அருகில் கிடந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இரத்தக்கறை இன்றி சுத்தமாக இருந்துள்ளது. மேலும் அவர்கள் உபயோகித்ததாக கூறப்படும் தோட்டாக்களிலும் இரத்தக்கறை இல்லை. அதேவேளையில், நான்கு பேரின் உடல்களும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளன. இதனை ஃபாரன்சிக் சயன்ஸ் லேபிலிருந்து கைப்பற்ற ஹார்ட் டிஸ்கிலிருந்து கிடைத்த புகைப்படம் தெரிவிக்கிறது.

மேலும் நான்கு பேரின் முதுகில் காணப்பட்ட தோட்டாத் துளைத்த காயங்களும் புலனாய்வு அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனெனில், காரிலிருந்து வெளியே வந்த தீவிரவாதிகள் தாங்கள் வந்த காருக்கு பின்னாலிருந்து போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனே போலீசார் அவர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் குஜராத் போலீசாரால் கூறப்பட்டன. அவ்வாறெனில்,நேருக்கு நேராக துப்பாக்கிச்சூடு நடைபெறும் வேளையில் எவ்வாறு முதுகில் குண்டு பாயும் என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை புலனாய்வுக் குழுவினர் விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்காக மத்திய ஃபாரன்சிக் லேபிடம் அளிப்பார்கள். முன்பு மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங்க் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேர் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்பதை கண்டறிந்திருந்தது.

போலீசார் மாநில அரசிடமிருந்து வெகுமதியும், பாராட்டையும், பதவி உயர்வையும் பெறுவதற்காக நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் கொலை என தமாங்க் கண்டறிந்தார். இதனை குஜராத் அரசு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றம் இந்த அறிக்கைக்கு தடை விதித்திருந்தது. இதற்கெதிராக இஷ்ரத்தின் தாயார் ஷமீமாவும், போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஜாவேதின் தந்தை கோபிநாத் பிள்ளையும் அளித்த புகார் மனுவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இதனடிப்படையில் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது.

செய்தி:மாத்யமம்

No comments:

Post a Comment