நமது தேசத்தின் இத்தனை முரண்களுக்கும் காரணம். இன்று வளர்ந்து நிற்கும் மனித முரண்பாடுகள். எங்கே சரி செய்ய வேண்டுமோ இந்த முரணை அங்கே நாம் சரி செய்யத் தவறி விட்டு வேர்களில் ஏற்பட்ட தவறுகளை கிளைகளில் சரி செய்ய முனைகிறோம். எமது கழுகுப் பார்வையில் குழந்தை வளர்ப்பு பற்றி வலுவாக மக்களின் மனதில் பதியச் செய்யும் படி ஒரு கட்டுரை செய்ய வேண்டும் என்ற பேரவாவை இந்த கட்டுரையை உங்களுக்குச் சமர்ப்பிப்பதின் மூலம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
குழந்தை வளர்ப்பு அல்லது நேற்றைய குழந்தைகளுக்கு சில ஆலோசனைகள்
யாருக்கு அறிவுரை ?
மாறி வரும் இன்றைய சூழலுக்கு ஏற்றபடி நேற்றைய குழந்தைகளான இன்றைய பெற்றோர்களுக்கு தான் அறிவுறுத்த வேண்டியது இருக்கிறது.
குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகள், கணினி யுகத்தின் வேகத்திற்கு ஏற்ப சிந்திக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்கள் . ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுகிறோம் என்று பெற்றோர்கள் படுத்தும் பாடு இருக்கே அப்பப்பா !! பாவம் குழந்தைகள் !! அதிக பாடசுமை, பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்புகள், போட்டி உலகத்தில் தங்களை முன்னிறுத்த எடுக்கும் முயற்சிகள் அத்தனையையும் சமாளித்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் பெற்றோர்கள் அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஆனால் உண்மையில் பல வீடுகளில் என்ன நடக்கிறது......?!!
கொஞ்சம் யோசியுங்களேன்
குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள் மிகக் குறைந்துவிட்டது. பொருளாதாரத் தேவைக்காகவும், வாழ்க்கை வசதியை பெருக்கவும் நிமிட முள்ளை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களே ஒரு நிமிடம் நிதானியுங்கள்,
உங்களின் இந்த ஓட்டம் யாருக்காக ? எதற்காக ?
வெகு சுலபமாக சொல்வீர்கள் என் பிள்ளைகளுக்காக என்று . ஆனால் இது வெறும் சமாளிப்பு !!
முழுக்க முழுக்க உங்களின் சந்தோசத்துக்காக, பிறர் முன் கௌரமாக வாழ வேண்டும் என்ற அந்த ஆசைக்காக ! குழந்தைகளின் வசதிக்காக கார் வாங்கினேன், வீடு கட்டினேன், இதை செய்தேன், அதை செய்தேன் என்று இனியும் சொல்லாதிங்க. எந்த குழந்தையும் எனக்கு வீடு கட்டி வையுங்கள், பேங்கில் பணம் போட்டு வையுங்கள் என்று கேட்டதா ? (சின்ன குழந்தைக்கு என்ன தெரியும் என்று அறிவு பூர்வமா பதில் சொல்ல கூடாது) வீடு, பேங்க் பேலன்ஸ் முக்கியம் தான். ஆனால் அதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது நல்லது அல்ல. கண்ணுக்கு தெரியாத எதிர்காலம் என்ற ஒன்றுக்காக ஓடி ஓடி சம்பாதித்து பொருள் சேர்க்கும் நீங்கள் கண்முன் இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறீர்கள்...??!
முதலில் உங்கள் குழந்தையின் இன்றைய தேவை என்ன என அறிந்து அதை முதலில் நிறைவேற்றுங்கள். குழந்தையை அருகில் அழைத்து மெதுவாக பொறுமையாக கேட்டு பாருங்கள் ' உனக்கு என்னமா வேண்டும் என்று ' குழந்தை சொல்லும் 'என்கூட விளையாடணும்', 'என்னை வெளியே கூட்டி போங்க' !! வீட்டிற்குள் நுழையும் அப்பாவை பார்த்ததும் ஓடி வரும் குழந்தை அப்பா 'இன்னைக்கு கிளாஸ்ல ஹரிணி இல்ல அவ.....'என்று எதையோ சொல்ல ஆரம்பிக்கும் போதே 'அப்பா டியர்டா இருக்கேன்,தொந்தரவு பண்ணாத ' என்று வெறுப்பாக சொல்லாமல் ஒரு இரண்டு நிமிடம் காது கொடுத்து கேளுங்கள். அல்லது வெயிட் பண்ணு கொஞ்சம் ரிலாஸ் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மறுபடி வந்து அவசியம் கேளுங்கள். குழந்தையும் மிகுந்த ஆர்வமாகி சொல்ல தொடங்கும்.
தன் பேச்சை பெற்றோர்கள் விரும்பி கேட்கிறார்கள் என்ற எண்ணம் அக்குழந்தையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். தவிரவும், பள்ளியில் குழந்தையின் நடவடிக்கை, ஆசிரியர்களின் அணுகுமுறைகள் எப்படி இருக்கிறது, ஏதும் பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பதையும் புரிந்து கொள்ள முடியும். முதலில் உங்கள் குழந்தையின் சின்ன சின்ன தேவையை நிறைவேற்றுங்கள். அப்புறம் பார்க்கலாம் வீடும் காரும்...!
நாம் இருவர் நமக்கு ஒருவர் !
இன்று பல வீடுகளில் ஒரு குழந்தை தான், காரணம் கேட்டால் 'இத ஒன்னு வளர்த்தா போதாதா இருக்கிற விலைவாசியில' என்று பதில் வரும். ஆனால் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் நாலு, ஐந்து குழந்தைகளை பெற்றார்கள், படிக்க வைத்தார்கள், திருமணம் முடித்து கொடுத்தார்கள் !! அன்றைய விலைவாசிக்கு தக்கதாகத்தான் அப்போதைய அப்பாக்களின் சம்பளமும் இருந்தது. பின் அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று ? காரணம் அவர்களிடம் தேவைக்கு மீறிய ஆசைகள், ஆடம்பரம், போட்டி மனப்பான்மை இல்லை. முக்கியமாக வாழ்க்கை வசதியைப் பெருக்க அவசரம் காட்டவில்லை . ஒவ்வொரு செயலையும் நிதானித்துத் தீர்மானித்தார்கள். இப்போது கணினிகாலம் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம்.
தவறில்லை ஆனால் இந்த ஓட்டத்தை சற்று நிறுத்தி குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். அந்த நேரங்கள் வானவில் நிமிடங்கள் ரசிக்க/பார்க்க தவறிவிட்டோம் என்றால் க்ஷண நேரத்தில் மறைந்து விடும்.
நாம் மாறுவோம்
* தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை போன்ற உறவுகளின் பெயர்கள் மறந்து/மறைந்து வருகிற காலம் இது. வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவுகள் கூட இல்லாமல் போகலாம் !! அதனால் விடுமுறை நாட்களில் பார்க், பீச் , சினிமா என்று போவதை விட உறவினர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லலாம். அவர்களை நம் வீட்டிற்கு வரவழைக்கலாம். சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் நம் குழந்தைகளுக்காக அதை மறந்து உறவுகளின் உன்னதத்தை உணர்த்தலாம். நம்மை பார்த்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டும்.
* தொலைகாட்சி பார்க்காதே என்று சொல்வதற்கு பின்னால் சீரியல் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. பார்க்க அனுமதியுங்கள். டிஸ்கவரி, ஜியாக்கிரபி போன்ற சேனல்கள் பார்க்கட்டும். கார்ட்டூன்(சில தவிர்த்து) பார்ப்பதால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது...? அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பார்க்க செய்யுங்கள். இயன்றால் அவர்களுடன் அவற்றை சிறிது நேரம் நீங்களும் பாருங்கள் இவ்வாறு செய்வதின் மூலம் நமது மன அழுத்தம் குறைந்து குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விடுவோம். அவர்களும் ரிலாக்சாக பீல் பண்ணுவார்கள்.
* கல்வி தொடர்பான டிவிடிக்களை போட்டு பார்த்தால் குழந்தைகள் விரைவாக அந்த பாடங்களை கிரகித்து கொள்வார்கள் என்று நாம் எண்ணுவோம், ஆனால் இப்படி திரைகளை பார்த்து தெரிந்து கொள்வதைவிட மற்றவர்களுடன் பேசி பழகும் குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது, விரைவாக எதையும் கற்றுக் கொள்கிறார்கள் என்று ஆய்வு சொல்கிறது. அதனால் அக்கம் பக்கம் குழந்தைகளுடன் ஒரு ஆரோக்கியமான நட்பை ஏற்படுத்தி கொடுங்கள். நன்கு விளையாடட்டும், பேசி பழகட்டும்.
* உடலுக்கு பயிற்சி தரக்கூடிய ஷட்டில் காக் , ரிங் பால், ஸ்கிப்பிங், த்ரோ பால் போன்ற விளையாட்டுகளை அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள், அவர்களை விளையாட உற்சாகபடுத்துங்கள்.
* இப்போதுள்ள குழந்தைகளின் முக்கிய பிரச்சனை ஞாபக மறதி, இதற்கு ஒரு எளிய வழியாக பகல் நேர தூக்கத்தை சொல்கிறார்கள் வல்லுனர்கள். தூங்கி எழுந்தபின் செய்யும் எந்த வேலையும் அல்லது எதையும் கற்றுகொண்டால் அது எளிதாக மூளையில் பதியும். விடுமுறை நாட்களில் முடிந்த வரை பகலில் சிறிது நேரம் தூங்க வைத்து பழக்குங்கள்.
* சில அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதாக எண்ணி குழந்தைகளின் சில தவறுகளை கணவரிடம் மறைப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறை. அவ்வாறு செய்யும் போது அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்று துணிச்சலாக தவறுகளை செய்ய தொடங்குவார்கள்.
* சில வீடுகளில் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் தங்கள் குழந்தைகளுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். இதுவும் சரியன்று. எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்தே, இருவரின் விருப்பத்தின் பெயரிலேயே குழந்தைகளுக்கான பொருட்கள் வாங்கப்பட வேண்டும்.
* சிலர் கண்டிப்பதில் ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள், அதாவது குழந்தை ஒரு தவறை செய்து விட்டால் ஒருவர்(அப்பா) கண்டிக்க வேண்டும் என்றும் மற்றொருவர்(அம்மா) சமாதானம் படுத்தணும் என்றும்...! ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது...அப்பாவிற்கு தவறாக படுவது அம்மாவிற்கு சாதாரணமாக படுகிறதே என்று குழந்தை கொஞ்சம் குழம்பி யோசிக்க ஆரம்பித்துவிடும். தவறு என்றால் இருவருக்கும் தவறுதான். இருவரும் கண்டிக்க வேண்டும்.
* பொதுவாக ஒரு குழந்தையிடம் பலரும் சகஜமாக கேட்கும் கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா ? அப்பா பிடிக்குமா ? உண்மையில் இந்த கேள்வியே அபத்தம். அம்மா, அப்பா இருவரும் வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே...இருவருக்கும் சம அளவில் மரியாதையும், அன்பும் கொடுக்கப்பட வேண்டும். இதை முதலில் குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகளை குழந்தையாக எண்ணி நடந்து கொண்டாலே போதும். வயதிற்கு மீறிய எதிர்பார்ப்பை அவர்கள் மீது திணிக்காமல் இருங்கள். அவர்களுக்கு வழியை மட்டும் காட்டுங்கள், கூடவே செல்ல வேண்டும் என்பது தேவை இல்லை.
No comments:
Post a Comment