Friday, June 10, 2011

பாலைவனத்தில் ஒரு பசுமை நகரம் சலாலா

சலாலா - மஸ்கட்டில் இருந்து 1200 கிமீட்டரில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பது சலாலா நகரம். சலாலாவின் ஸ்பெஷாலிட்டியே அதன் பசுமை தான். வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு நாலு ஈச்சமரங்கள் ஒன்றாக இருந்தாலே அது பசுமை என்று சொல்வோம். அப்படிப்பட்ட நிலைமையில் வழி முழுவதும் தென்னையும் வாழையும் அடர்ந்த பசுமைக்காடு அமைந்திருந்தால்? அடிக்கும் வெயிலுக்கு அனைத்து ஒமான் மக்களும் சலாலாவுக்கு ஓடுகிறார்கள். 

மஸ்கட்டில் இருந்து சலாலாவுக்கு தினமும் மூன்று முறை ஓமான் ஏர்வேஸின் டவுன் பஸ் பறக்கிறது. விடுமுறை நாள்களிலும் சலாலாவில் நல்ல காலநிலையிலும் விமானத்தில் சீட் புக் செய்தவர்கள் முன்கூட்டியே விமானநிலையம் சென்றுவிடுவது நல்லது. நம்ம சீட் நமக்குத் தான் என்ற நினைப்பில் கொஞ்சம் நேரம் கழித்துச் சென்றால் உங்கள் இருக்கை உங்களுடையது இல்லை. அடுத்த விமானம் வரும்வரை காத்திருக்க வேண்டியது தான். குறுகலான சீட்டில் இடுக்கிக்கொண்டு உட்கார்ந்து ஒன்றரை மணிநேரம் பயணம் செய்தால் சலாலா நம் கண்முன் விரிகிறது. அதன் பசுமையை வானில் இருந்து பார்க்கும்போதே மனசுக்குள் குளிரடிக்கும் பிரமை. 

விமானநிலையத்தில் இறங்கியதுமே இது ஒமானா அல்லது கேரளாவா என்ற சந்தேகம் நமக்கு வந்துவிடுகிறது. முழுக்க முழுக்க தென்னையும் வாழையும் வரிசைகட்டி நிற்க வீசும் காற்றிலேயே ஓர் அழகிய வாசம். காரில் தங்குமிடம் நோக்கிப் பயணம் செய்தோம். கூட வந்த நண்பர் காரெல்லாம் முன்பே ஏற்பாடு செய்திருந்ததால் பிரச்சனை இல்லை. டாக்ஸிக்குக் கொடுக்கும் வாடகையில் ஒரு பழைய டொயோட்டா க்ரஸிடாவே வாங்கிவிடலாமாம். வழியெங்கும் தென்னங்கீற்றுக் கொட்டகையில் இளநீர், வாழைப்பழம், கொய்யாவென கொட்டி வைத்திருக்கிறார்கள். அருமையான செவ்விளநீர் - சென்னையில் கொடுக்கும் காசுக்கு இங்கே இரண்டு மூன்று இளநீர் வாங்கிக் குடிக்கலாம். குடித்தோம். நான் வழக்கம் போல இளநீருக்கு ஸ்ட்ரா இல்லாமல் டைரக்ட் அட்டாக்.

மறுநாள் காலையில் ஊர் சுற்றக் கிளம்பினோம். நகரை விட்டுச் சிறிது தூரம் சென்றதும் விசித்திரமான நில அமைப்பு. சாலையின் ஒரு புறம் காய்ந்த பாலைவனம், மற்றொரு புறம் பசுமையான மலைகள். ஐம்பது கிமீ கடந்த பிறகு மிர்பாத் என்ற இடம் வருகிறது. இந்த இடத்தின் சிறப்பு - புவி ஈர்ப்புவிசையின் மீது நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவது தான். மேடான சாலை, காரின் கியரை ந்யூட்ரலில் போட்டுவிட்டு ப்ரேக்கில் இருந்து காலை எடுத்துவிட்டால் மேட்டில் கார் தானாகவே ஊர்ந்து ஏறுகிறது. கிட்டத்தட்ட இருநூறு மீட்டர்களுக்கு இப்படி இருக்கிறது. எப்படி சாத்தியம் என்று அறிவியல் அறிஞர்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

மிர்பாத் சாலையில் இருந்து கொஞ்சம் போனால் மழையின் தூவானத்துடன் பச்சைமலைகள். ஏலகிரிக்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் வருகிறது. மலையும் மலைநடுவே ஓடும் அழகிய ஆறும். வளைகுடா பகுதியில் இது ஓர் ஆச்சர்யம் தான். மழைக்காலத்தில் மலைகளில் அருவியே கொட்டுமாம். நம்மூர் நாயர்கள் யாராவது தேயிலை டீ போட்டுக்கொடுத்திருந்தால் தேவாமிர்தமாக இருந்திருக்கும். கிடத்த சோளப்பொறியை மட்டும் கொறித்துவிட்டு வந்தோம்.

சலாலாவின் கடற்கரையோரச் சாலையில் பயணம் செய்தால் வழி முழுவதும் படிவுப்பாறைகளில் அரிப்பு ஏற்பட்டுக் குடைவுகளாகி இருக்கிறது. அப்படி ஓரிடத்தில் கடல் அலைகள் பாறைகளுக்கு அடியில் அரிப்பை ஏற்படுத்தி ஒரு பெரிய துளை உண்டாகி அதன் வழியே கடலலைகள் துள்ளித் தெறிக்கின்றன. விலை உயர்ந்த கேமரா வைத்திருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லையென்றால் லென்ஸ் காலாவதி ஆகிவிடும். அத்தனை உயரத்திற்கு அலைகள் குதிக்கின்றன.

சலாலாவில் நமது இட்லி தோசை பிரியர்களுக்கு இருக்கும் ஒரே மார்க்கம் மூன்று நான்கு உடுப்பி உணவகங்கள் தான். விடுமுறை நாள்களில் அநியாயக் கூட்டமாக இருக்கிறது. அரைமணி நேரம் காத்திருந்தால் ஆறிப் போன தோசை கிடைக்கலாம். அரபி உணவுகளுக்குப் பஞ்சமில்லை.

ஒமானில் இருப்பவர்களுக்கு கொதிக்கும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் சலாலா ஒரு வரம். சலாலாவில் அது மழைக்காலம். அந்த மழைக்காலத்தில் நடக்கும் கரீஃப் (Khareef Festival) சலாலாவின் சிறப்பு. சிறு குழந்தைகள் இல்லையென்றால் விமானத்தில் செல்வதைவிட நல்ல SUV காரில் சென்று வரலாம். பசுமையுடன் கூடிய அருமையான பயணமாக அமையக்கூடும்.


No comments:

Post a Comment