Tuesday, June 28, 2011

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
முஹம்மத் (ஸல்)
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றுபவராக இருக்கலாம். நீங்கள் ஒரு பொதுவுடமை வாதியாகவோ, ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரக் கொள்கையில் ஆர்வம் உள்ளவராகவோ விளங்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களது மதம் மற்றும் அரசியல் கொள்கை எதுவாக இருப்பினும் சரி, உங்களது தனிப்பட்ட மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தாலும் சரியே. நீங்கள் அவசியம் இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இம்மாமனிதரைப் பற்றித்தான் பிரித்தானியக் கலைக்களைஞ்சியம், “மதத் தலைவர்கள் அனைவரிலும் தலைசிறந்த வெற்றியாளர்” என்று புகழ்கிறது. உலகப் புகழ் வாய்ந்த அறிஞர் பெர்னாட்ஷா, “முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இன்று நம்மிடையே இருப்பாரானால், இன்று மானுட நாகரிகத்தையே அழித்திட முனைந்திருக்கும். பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் வெற்றி கண்டிருப்பார்” என்று இம்மாமனிதரைப் போற்றுகிறார்.
உலகில் தோன்றிய மனிதர்கள் அனை வரையும் விட இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் ஒரு அறநெறியைப் போதித்தார். ஓர் அரசை நிறுவினார். ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்கினார். எண்ணற்ற சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்தூன்றினார். நாம் அறிவுறுத்திய கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான, நிலையான சமுதாயத்தை நிறுவினார். மனித சிந்தனைகளையும் போக்கையும் புரட்சிமயமாக்கி புதிய சகாப்தத்தை உருவாக்கினார்.
அம்மாமனிதர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
ஆம் அவர்கள் தாம் மிகக் குறுகிய காலமாகிய இருபத்தி மூன்று ஆண்டுகளில் மாபெரும் சாதனைகளைப் புரிந்து பலரும் புகழும், பெருமை உடையவரானார்கள். அவர்கள் கி.பி. 571ஆம் ஆண்டு அரேபியா நாட்டில் பிறந்தார்கள். தம்முடைய அறுபத்தி மூன்று ஆண்டு வாழ்வுக் காலத்திற்குள் மக்கள் அனைவரையும் சிலை வணக்கத்தினின்றும் விடுவித்து, ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது ஆகியவற்றில் மூழ்கிக் கிடந்த அம்மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும் பக்தியும் உடையோராய் மாற்றினார்கள். சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்வாக மாற்றினார்கள். இத்தகைய முழுமையாக சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பு கண்டதில்லை, பின்பும் கண்டதில்லை.
நமது காலத்தின் தலைசிறந்த சரித்திர ஆசிரியர் லாமர்டின் மனித மேன்மையின் சிறப்பைக் குறித்து கூறுகிறார்: “உயர்ந்த இலட்சியம், குறைவான் வசதிகள், வியப்பூட்டும் வெற்றி, ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ்மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம். பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயுதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.
ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப் படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரச வம்சங்கள், ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக் கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள். நாம் ஏற்றுக் கொண்ட ஒரு கருத்தாக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஒர் ஏமாற்றுக்காரர் என்றோ, மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.
இந்த சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை. மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை. முந்தியது இறைவன் என்றால் என்ன வென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று, தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று பிரச்சார துணையில் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத் தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள், கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
(Lamartine, Historie de la Turquie, Paris 1854, Vol II, pp. 276-277)

No comments:

Post a Comment