
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில் என்.ஆர். காங்கிரஸுக்கு 15 இடங்கள் கிடைத்தன. அதிமுகவுக்கு 5 இடங்கள் கிடைத்தன.
தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் உதவியை உதறிய என்.ரங்கசாமி, தனித்து ஆட்சியமைத்துள்ளார். இதனால் அதிமுக ஒதுங்கிக் கொண்டு விட்டது. இந்த நிலையில் அமைச்சர்களை நியமிப்பதில் பெரும் சவால்களை சந்தித்தார் ரங்கசாமி. தனது கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட அத்தனை பேருமே அமைச்சர் பதவி கேட்டதால் அவருக்குப் பெரும் குழப்பமாகி விட்டது. இருப்பினும் கடுமையாகப் போராடி நான்கு அமைச்சர்களை நியமித்து அவர்களைப் பதவியேற்க செய்தார் ரங்கசாமி.
ஆனால் தற்போது என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் ஆட்சிக்கே ஆபத்தாகியுள்ளது. அதிமுகவின் ஆதரவைக் கோர முடியாத நிலை உள்ளதால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடியுள்ளார் ரங்கசாமி.
இதற்காக அவர் டெல்லி விரைந்துள்ளார். சென்னை வழியாக டெல்லி விரைந்த அவர் இன்று மாலை சோனியா காந்தியை சந்தித்து ஆதரவு கேட்பார் என்று தெரிகிறது.
நாங்க பதவிக்காக பறக்கலை-வைத்திலிங்கம்
இதற்கிடையே, ரங்கசாமி அரசுக்கு ஆதரவு தர நாங்கள் தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் எந்தக் காலத்திலும் கூட்டணிக்காகப் பறக்கலை. பதவிக்காக நாங்கள் பறக்கலை. இன்னும் சொல்லப் போனால் வெளியிலிருந்து ஆதரவு என்று கூடச் சொல்வோம். ஆனால் அம்மா சொல்லணும்.
அன்னை சோனியா காந்தி ஆதரவு தரச் சொன்னால் நாங்கள் ஆதரவு தருவோம் என்றார் அவர்.
40 சதவீத ஓட்டுக்களைப் பெற்று அமோக வெற்றியை சந்தித்து அரசும் அமைத்து விட்ட நிலையில் ரங்கசாமி படாதபாடு பட்டு வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு அமைச்சர்களை நியமிக்க பெரும்பாடுபட்ட ரங்கசாமி, அவர்களுக்கு இன்னும் இலாகாக்களைக் கூட ஒதுக்க முடியாத நிலையி்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
No comments:
Post a Comment