Saturday, June 11, 2011

தவறுகளைக் கொண்டாடுவோம்!

''தமிழ்நாட்டிலிருந்து நிறைய பிஸினஸ்மேன்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என பலமுறை யோசித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரே காரணம், தவறு செய்துவிடுவோமோ என்று பயப்படும் நம் குணாதிசயம்தான். பிஸினஸில் தவறு செய்தால் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அத்தனையும் பறிபோய்விடுமோ என்கிற பயம்தான் பலரையும் பிஸினஸ் பக்கமே தலைவைத்துப் படுக்காதபடிக்குத் தடுத்துவிடுகிறது. உள்ளபடி பார்த்தால், தவறு செய்யாமல் எந்த ஒரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்துக்குச் செல்லும் மனப்பக்குவத்தை நாம் பெற வேண்டும். தவறுகளைக் கொண்டாடும் மனப்பான்மை நமக்கு வந்தால்தான் நம் அடுத்த தலைமுறையையாவது உலகளாவிய பிஸினஸ்மேன்களாக மாற்ற முடியும்'' - முக்கியமான விஷயத்தை நெத்தியடியாக எடுத்துச் சொல்கிறார் கே.பி. சந்திரசேகர்.
'சந்திரா' என பிஸினஸ் வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படும் சந்திர சேகர், அமெரிக்காவில் வாழும் தமிழ்த் தொழிலதிபர். இதுவரை ஐந்துக்கும்  மேற்பட்ட கம்பெனிகளைத் தொடங்கி நடத்தும் இவர் ஒரு தொடர் தொழில் முனைவர். பெங்களூருவில் இவர் நடத்தும் 'ஜாம்கிராக்கர்' என்கிற ஐ.டி. நிறுவனம், க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் வெற்றிநடை போடுகிறது. அண்மையில் சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம். உற்சாகம் பொங்க பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார் அவர்.
''என் சொந்த ஊர் கும்பகோணம் என்றாலும், நான் படித்ததெல்லாம் சென்னையில்தான். கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தினார் என் அப்பா. அப்போதே சில பங்குகளை வாங்கி, ஏ.ஜி.எம்.முக்கு போய் கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறேன். கம்பெனிகளின் லாப-நஷ்டங்களை அப்போதே எனக்கு அலசத் தெரிந்ததால் பிஸினஸ் பிளான் எழுதவும் தெரிந்து கொண்டேன். பஸ் கண்டக்டர்களுக்கு பயன்படுகிற மாதிரி கால்குலேட்டருடன் கூடிய ஒரு பஞ்சிங் மெஷினை உருவாக்குவது பற்றி ஒரு பிஸினஸ் பிளானை எழுதி கேசியோ நிறுவனத்துக்கு அனுப்பினேன். கொரியா, தைவான் நாடுகளிலிருந்து எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொம்மைகளை இறக்குமதி செய்து விற்பது பற்றி இன்னொரு பிஸினஸ் பிளான் தயார் செய்தேன். ஆனால் அப்போது எங்களிடம் பணமில்லை. தவிர, எங்கள் குடும்பத்திலிருந்து அதுவரை பிஸினஸில் யாரும் நுழைந்ததில்லை. எனவே நானும் நல்ல பிள்ளையாக படித்து விட்டு, வேலைக்குப் போனேன்.
1983-ல் விப்ரோவில் வேலைக்குச் சேர்ந்தேன். விப்ரோ என் திறமைக்கு விருந்து போட்டதோடு எனக்குள் அடங்கிக் கிடந்த பிஸினஸ்மேனையும் தட்டி எழுப்பியது. 1990-ல் என்னை அமெரிக்காவுக்கு அனுப்பியது விப்ரோ. அங்கு இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு வேலையை விட்டுவிட்டு பிஸினஸ் தொடங்க முடிவு செய்தேன். இத்தனைக்கும் அப்போது என்னிடம் இருந்தது வெறும் 4,500 டாலர் மட்டுமே! அதை வைத்து அதிகபட்சம் 45 நாட்களை மட்டுமே ஓட்ட முடியும். 'கவலைப்படாமல் இறங்குங்கள்' என்று சொல்லிவிட்டார் என் மனைவி. சரி என்று நானும் ஒரு கம்பெனியை ஆரம்பித்து, இரண்டு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் எனக்கு அம்மை வந்துவிட்டது. வெளியே எங்கேயும் போக முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம். கையிலிருக்கிற பணம் தீருவதற்குள் மீண்டும் சம்பாதித்தாக வேண்டும் என்கிற கட்டாயம். நான் துவண்டுவிடவில்லை. வீட்டில் இருந்தபடி போனில் பேசி, ஆர்டர் வாங்கி, அவர்கள் சொன்ன வேலையைச் செய்து கொடுத்தேன்.
என் நண்பர்கள் இருவர் செய்த உதவியால் அந்த கம்பெனியை ஒரே வருஷத்தில் நன்றாக வளர்த் தெடுத்தேன். அந்த ஒரு வருஷத்தில் என் மனைவி ஒரு புதுச்சேலைகூட வாங்கவில்லை. என் இரண்டு குழந்தைகளோடு மிகச் சிக்கனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோம். இத்தனைக்கும் 80 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அப்போது என் கையில் இருந்தது. ஆனாலும் பிஸினஸில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறிதான் எனக்குள் இருந்தது. பிஸினஸில் ஜெயிப்பதற்கு தேவை தணியாத வெறியே ஒழிய பணமல்ல என்பதற்கு நானே ஓர் உதாரணம்'' - நம்பிக்கை பொங்கப் பேசினார் சந்திரா.
''பிஸினஸ் எப்படிச் செய்ய வேண்டும் என நான் எந்தக் கல்லூரியிலும் படித்ததில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் நானேதான் பட்டுபட்டுத் தெரிந்து கொண்டேன். எத்தனையோ முறை தவறு செய்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் தவறே செய்யக்கூடாது என்று நான் நினைத்ததில்லை. உதாரணமாக, ஒரு சம்பவம். 1993-ல் எக்சோடஸ் கம்யூனிகேஷன்ஸ் என்கிற இன்டர்நெட் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அப்போதுதான் அமெரிக்காவிலேயே இன்டர்நெட் புழக்கத்துக்கு வந்துகொண்டிருந்தது. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த நிறைய பணம் தேவைப்பட்டது. ஆனால் யாரும் கடன் கொடுக்கத் தயாராக இல்லை. என்னால் ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம்கூட கொடுக்க முடியாத அளவுக்கு கஷ்டமான சூழ்நிலையில் நான் பெரிய தவறு செய்துவிட்டதாக நினைத்து அழுதேன். ஆனால் பொறுமையோடு கஷ்டப்பட்டு உழைத்ததால் அதிலிருந்து மீண்டுவர முடிந்தது'' - உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் சந்திரா.
''தவறு செய்வதால் வாழ்க்கையின் அதல பாதாளத் துக்கு போய்விடுவோம் என்று கவலைப் படுகிறோம். அப்படிப் போனாலும் அங்கிருந்து நம்மைத் தூக்கிவிட யாராவது ஒருவர் முன்வராமல் போய்விட மாட்டார்கள். அப்படி ஏதாவது ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் போய்விடாது. பிஸினஸில் ஏதாவது நாம் ஒரு தவறு செய்து இரண்டு அடி சறுக்கினால் ஐந்து அடிக்கு முன்னேறப் போகிறோம் என்று அர்த்தம். எனவே தவறு செய்தால் அதோடு நம் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டியதில்லை.
இப்படிச் சொன்னால், மனிதர்கள் நிறைய தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது தவறு. காரணம், தவறு செய்வது மனித இயல்பு அல்ல. ஒருமுறை தடுக்கி விழுந்த மனிதன் அந்த இடத்துக்கு அடுத்தமுறை வரும்போது கவனமாக இருப்பான். ஒருமுறை தீயைத் தொட்டு சுட்டுக் கொண்டவன் மீண்டும் அதை வெறும் கையால் தொட மாட்டான். ஒருமுறை பிஸினஸில் இழப்பு வந்தால், அடுத்தமுறை கவனத்தோடு அந்த விஷயத்தை கவனிப்பான். தவறிலிருந்து எந்த விதமான பாடத்தையும் கற்றுக் கொள்ளாதவர்களே செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து தோற்றுப் போகிறார்கள்.
நாம் செய்யும் தவறு எதுவானாலும் அதை மறைப் பதற்குப் பதில், எந்தச் சூழ்நிலையில் அந்தத் தவறை செய்தோம், மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் மீண்டுமொரு முறை அதே தவறைச் செய்ய மாட்டோம். பிஸினஸில் தவறுவதில் தவறே இல்லை. சின்ன சின்ன தவறுகளைச் செய்தாலும் பிற்பாடு பெரிய அளவில் சரியான காரியங்களை செய்யப் போகிறோம் என்கிற நம்பிக்கை நமக்குள் உருவாக வேண்டும். தவறுகளை மூடி மறைப்பதைவிட அதனைப் புரிந்து கொண்டு கடந்து போவதே சரி.'' - குதூகலமாகப் பேசி முடித்தார் சந்திரா.
thks
vikatan

No comments:

Post a Comment