Wednesday, June 8, 2011

வேதனையில் வெற்றிப் பெண்கள் !


ஆயிரத்துக்கு மேல மார்க்... ஆனாலும், அதே பஞ்சு மில் வேலை?'

வேதனையில் வெற்றிப் பெண்கள் !

'கொடிதினும் கொடிது இளமையில் வறுமை'. அந்த வறுமையான சூழலிலும் இடையறாது படித்து, இன்று தலைநிமிர்ந்து நிற்கும் தங்கங்கள் இவர்கள். மளிகைக் கடை, பஞ்சு மில், விவசாயம், நெசவுத்தறி என ஏழ்மையை ஒரு பக்கம் பூசிக்கொண்டே... அரசுப் பள்ளி சென்ற இந்த மாணவிகள், சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள்... சல்யூட் அடிக்க வைக்கிறது!
''நான் 1,030 மார்க் எடுத்திருக்கேன். சந்தோஷமா இருக்கு!'' என்று கண்கள் மின்ன ஆரம்பிக்கும் வேலூர், சைதாப் பேட்டை, பாத்திமா, சின்னதாக அப்பா வைத்திருக்கும் மளிகைக் கடையில் துவரம்பருப்பை பொட்டலம் கட்டிக் கொண்டு இருந்தார்.
''இந்தக் கடைதான், எங்க ஜீவாதாரம். ரெண்டு புள்ளைங் களயும் படிக்க வைக்கற அளவுக்கு வசதியில்லாததால, அண்ணன் படிக்கல. 'உனக் காகத்தான் படிப்பையே நிறுத் திட்டான். என்ன வேலை செஞ்சுனாலும் அவன் பொழச் சுக்குவான். ஆனா,
படிப்புதாம்மா உன் வாழ்க்கையை நிமிர்த்தும்’னு சொல்லிட்டே இருப்பார் அப்பா. அண்ணனோட தியாகத்துக்கு மதிப்பு செய்யணுங்கறதுக்காகவே கஷ்டப்பட்டு படிச்சேன். ஆனா, ரிசல்ட் வந்ததுல இருந்து அப்பா சோகமா இருக்கார்... என்னை காலேஜ்ல சேர்க்கணுமே! யார் யார்கிட்டயோ கடன் கேட்டுட்டு இருக்கார். எம்.காம். படிச்சுட்டு டீச்சர் ஆகணுங்கற என் ஆசை நிறைவேறுமானு தெரியல!''
இக்கட்டான குடும்பச் சூழ்நிலையால் ப்ளஸ் ஒன் படிப்பை நிறுத்திவிட்டு, மில் வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைத் தாங்கி, பிறகு... மீண்டும் படிப்பைத் தொடர்ந்த மஞ்சுப்பிரியா, வரலாறு பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் தேனி மாவட்ட பெண்!
''ப்ளஸ் ஒன் கால் பரீட்சையப்போ... அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போக, வருமானத்துக்கு வழி இல்லாம போயிடுச்சு. படிப்பை பாதியிலயே விட்டுட்டு, பஞ்சு மில்லுல 2,000 ரூபா சம்பளத்துக்கு கூலி வேலைக்குப் போனேன். 'வாழ்க்கை இந்த மில்லுக்குள்ளயே முடிஞ்சுடுமோ!’னு அழுகையா வரும். எங்க சாரா மிஸ்தான், 'எல்லாம் சரியாயிடும். அடுத்த வருஷம் நீ மறுபடியும் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலாம்’னு ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லு வாங்க. அது நடந்துச்சு. உரக்கடையில வேலைக்கு சேர்ந்த என்னோட அண்ணன், 'நீ படி... நான் பார்த்துக்கறேன்...’னு பொறுப்பு முழுசையும் ஏத்துக் கிட்டான். மறுபடியும் ஸ்கூல்ல சேர்ந்தேன். பயத்தோட... வெறியோட படிச்சேன். இப்போ 1,099 மார்க். ஆனா, மேற்கொண்டு படிக்கறதுக்கு என்ன வழினு தெரியல. மறுபடியும் பஞ்சு மில்தானோ?'’
'பள்ளிக்கூடத்துக்கு போற வழியில, வயல்ல இருக்கற அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டுப் போம்மா’ என ப்ளஸ் டூ தேர்வு எழுதப் போன போதும்கூட 'வயலும் வாழ்வும்' என போராடிப் படித்த தஞ்சாவூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி பெற்றிருப்பது 1,115 மதிப்பெண்கள்.
''அப்பா, அம்மா ரெண்டுபேருமே விவசாயக் கூலி வேலை பார்க்கறாங்க. பத்தாவதுல 482 மார்க் எடுத்தேன். 'போதும்மா... மேல படிக்க வைக்க சக்தி இல்ல’னு வீட்டுல சொன்னப்போ, எங்க ஸ்கூல்லயே ஃபீஸ் எதுவும் இல்லாம படிக்க வெச்சாங்க. காலையில வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, பஸ் ஸ்டாப்புக்கு மூணு கிலோ மீட்டர் சைக்கிள்ல போய், பஸ் பிடிச்சு ஸ்கூலுக்குப் போகணும். வீடு திரும்பினதும் முடிஞ்சவரை படிச்சுட்டு, விடியக்காலையிலயும் எழுந்திரிச்சு படிப்பேன். 'நல்ல மார்க் எடுத்திருக்கே’னு எல்லாரும் பாராட் டறாங்க. காலேஜுல சேர்ந்தும் இதேபோல பாராட்டு வாங் கணும்னு ஆசையிருக்கு... ஆனா, வசதிதான் இல்ல!'' என்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில், 1,156 மதிப்பெண்களுடன் ஆறாவது இடத்தைப் பிடித்திருக் கிறார் மணலி, ஜேடர்பாளையம் கிராமத்தை சேர்ந்த மௌனிகா. விசைத்தறிக் கூடத்துக்கு அவச ரமாக கிளம்பிக் கொண்டிருந்த வருக்கு, கேமராவுடன் நம்மை பார்த்தவுடன், ''பேட்டியா..?!'’ என்று அத்தனை உற்சாகம் கண்களில்.
''அப்பா, தினம் 100 ரூபாய் கூலிக்கு விசைத்தறி ஓட்டறார். அம்மா நூல் போடுறார். நானும், தங்கையும் வீடு கூட்டி, பாத்திரம் கழுவி, சமைச்சு, தண்ணி எடுத்துனு எல்லா வேலைகளையும் பகிர்ந்து முடிச்சுட்டு, ஸ்கூலுக்குக் கிளம்புவோம். சாயங்காலம் வந்து விசைத்தறி கூடத்துல நூல் போடுவோம். நான் தினம் ரெண்டு கட்டு நூல் போட்டிருவேன். முப்பது ரூபா கெடைக்கும். சனி, ஞாயிறுல அஞ்சு கட்டு வரைக்கும் போடுவேன். நோட்ஸ் வாங்க, புக் வாங்கனு படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்கும் உதவியா இருக்கும்.
நாங்க லைன் வீட்டுலதான் வாடகைக்கு இருக்கோம். வரிசையா வீடு இருக்கறதால ஒன்பது மணி வரை சத்தமாவே இருக்கும். அதுக்குப் பிறகு 11 மணி வரைக்கும் படிப்பேன். இன்ஜினீயராகணுங்கற கனவை மனசுல வெச்சுப் படிச்சேன். 197.5 என்னோட கட் ஆஃப். இப்போ அதுக்குத் தேவை யான மார்க்கை வாங்கிட்டேன். ஆனா... பணம்..?''
திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சத்யா 1,074 மதிப்பெண்கள். இவருடைய வீட்டிலும் 'சடக் ச்சசடக் சடக் ச்சசடக்’ என்ற தறியின் ஓசை வழிகிறது.
''இந்தத் தறி மட்டும்தான் எங்க சொத்து. அண்ணனைப் படிக்க வைக்க முடியாததால, திருப்பூர் பனியன் கம்பெனியில வேலை பார்க்கறாரு. 'ப்ளஸ் டூ-வாச்சும் முடிச்சுக்கறேன்’னு நான் கெஞ்சிக் கேட்டதால, என்னை மட்டும் படிக்க வெச்சாங்க. நாலு கிலோ மீட்டர் தொலைவில இருக்கற வதம்பச்சேரி சொக்கன் செட்டியார்- மல்லம்மாள் மேல்நிலைப் பள்ளியில படிச்சேன். அங்கதான் 'இஸ்ரோ’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை, தருமபுரி கலெக்டர் ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ். எல்லாம் படிச்சாங்க. 'நாமளும் பெரிய ஆளா வரணும்...’னு அவங்களை எல்லாம் மனசுல வெச்சுப் படிச்சேன். நல்ல மார்க்கும் எடுத்துட்டேன்.
இன்ஜினீயரிங் படிச்சு, நல்ல வேலைக்குப் போய், தறியிலயே உட்கார்ந்து வருஷமெல்லாம் உழைக்கற அப்பா, அம்மாவை உட்கார வெச்சுப் பார்த்துக் கணும்னு ஆசை. ஆனா, குடும்ப வறுமையால... 'திருப்பூர் பனியன் கம்பெனிக்கு டெய்லர் வேலைக் குப் போறியாம்மா..?’னு அப்பா கேட்கறாரு!''
கிருஷ்ணகிரி மாவட்டம், தீர்தம்மனஅட்டி கிராமத்தை சேர்ந்த ஆஷா, ஒரு மாற்றுத்திறனாளி. பார்வையற்றபோதும், 1,028 மதிப்பெண்கள் பெற்று மற்றவர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஆஷாவின் கதை, அனைவருக்குமே வைட்டமின்!
''அப்பா-அம்மா விவசாயக் கூலி வேலை பாக்கறாங்க. வீட்டுல நாலு பிள்ளைங்க. எனக்கும் அக்காவுக்கும் பிறவியிலேயே பார்வை பாதிப்பு. அக்கா அஞ்சாவதோட படிப்பை நிறுத்திட, நான் மட்டும் தொடர்ந்து படிச்சேன். சில நல்ல மனுஷங்க பத்தவாது வரை படிக்க உதவினாங்க. 393 மார்க் எடுத்தேன். பதினோராம் வகுப்புல சேர்த்துக்க முடியாதுனு ஸ்கூல்ல சொல்லிட்டாங்க. பஞ்சாயத்து தலைவர் சின்னவீரப்பா முயற்சியால கலெக்டர் தலையிட... தளி அரசு மேல்நிலைப் பள்ளியில சேர்ந்தேன். இப்போ ஸ்கூல் செகண்ட் வந்திருக்கேன்.
சட்டம் படிக்கணும்னு ஆசை. எனக்கு பின்னாடி ரெண்டு தங்கைகள் ஸ்கூல்ல படிக்கறதால, பணம் கட்டியெல்லாம் என்னை காலேஜ்ல சேர்த்துவிடற நிலைமையில எங்க குடும்பம் இல்ல.''
ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தும், 'காலேஜுல சேர முடியுமா..?’ என்ற ஏக்கம் சுமந்த கேள்வியை காலத்திடம் விட்டுக் காத்திருக்கிறார்கள் இந்த மாணவிகள்!
பதில் சொல்லுமா காலம்?

No comments:

Post a Comment