Sunday, June 26, 2011

கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்!

Jayalalitha and karunanidhi
 சென்னை: இலவசங்களையும், கலர் கலராய் காந்தி படம் பொறித்த கரன்சிகளையம் அள்ளி வீசி விட்டால் போதும், தமிழகத்து மக்கள் கூட்டத்தை அழகாய் ஏமாற்றி விடலாம் என்று 'தப்புத் தாளங்களாய்' வலம் வந்த திமுக அரசுக்கும், கருணாநிதிக்கும் மக்கள் கற்றுக் கொடுத்த பாடம், நிச்சயம் அவர்களால் மறக்க முடியாது. அதேசமயம், இவர்களுக்கு மக்கள் அளித்த பாடத்திலிருந்து அதிமுக அரசு பல பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.

உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக என்று கூறுவது போல, தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, திமுகவுக்கு மட்டும்தான் அறுதிப் பெரும்பான்மையைக் கொடுக்காமல் மைனாரிட்டி அரசைக் கொடுத்தனர் தமிழக மக்கள் கடந்த 2006ம் ஆண்டு.

கடந்த 2001-06 ஜெயலலிதா ஆட்சியின்போது கடைசிக்கட்டத்தில் அவர் செய்த சில தவறுகளால் மக்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்ததால் ஏற்பட்ட விளைவு அது. அதாவது அரை குறை மனதுடன்தான் ஆட்சி திமுக பக்கம் போனது அப்போது. ஜெயலலிதா செய்த தவறுகளை கருணாநிதி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் பாதி மக்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கருணாநிதியும் மக்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொண்டார். ஆனால் சற்று வித்தியாசமாக.

மக்கள் எதிர்பார்க்காத, ஜெயலலிதா கூட செய்ய நினைக்காத, முடியாத தவறுகளை அவர் அடுக்கடுக்காக செய்தார். அதனால் ஏற்பட்ட விளைவுதான் 2011 சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய அடி, மரண அடியை திமுகவுக்கு மக்கள் கொடுத்து விட்டனர். காரணம், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு ஆட்சியிலும் இப்படிப்பட்ட தவறுகள், குழப்பங்கள், அட்டகாசங்கள் நடக்கவில்லை என்பதே.

வெறும் மாற்றம் தேவை என்று நினைத்து தமிழக மக்கள் ஆட்சிகளை மாற்றுவதில்லை. அப்படித்தான் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. தோற்றவர்கள் இதையே காரணமாக கூறி தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை. அப்படி இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் தொடர்ந்து முதல்வராக இருந்திருக்க முடியாது. அவரை மக்கள் மாற்றவில்லையே. காரணம், ஒவ்வொரு ஆட்சியின்போதும் அவர் ஒரு சாதனையைச் செய்தார் எம்.ஜி.ஆர்..

ஆனால் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி ஒவ்வொரு முறையும் செய்த தவறுளால்தான் ஆட்சிகளை மாறி மாறி இழந்து வந்திருக்கிறார்கள்.

1991-96ல் ஜெயலலிதா தவறு செய்தார் என்பதால்தான் மீண்டும் கருணாநிதிக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் ஜெயலலிதாவையும், அவரது அமைச்சர்களையும் பழி வாங்குவதிலேயே கருணாநிதி குறியாக இருந்தார் என்ற கெட்ட பெயர் அவருக்கு ஏற்பட்டதால் அடுத்த முறை மக்கள் வாக்கை மாற்றிப் போட்டனர்.

பின்னர் மீண்டும் வந்த ஜெயலலிதா, கருணாநிதியைப் பழிவாங்குவதில் வேகம் காட்டினார். நள்ளிரவில் அவரைக் கைது செய்தார். அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தவறுகளால் அவருடைய ஆட்சியை மக்கள் மாற்றி மீண்டும் திமுகவிடம் கொடுத்தனர்.

2006ல் நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. வந்த வேகத்தில் இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களை அவர் நிறைவேற்றியபோது மக்கள் வியந்தனர். ஆனால் இது குறுகிய காலம்தான். பிறகு நடந்ததெல்லாம் தமிழக மக்கள் மறக்க முடியாத அளவிலான வலியுடன் கூடிய வரலாறுகள்.

கருணாநிதியின் குடும்பத்தினர் படிப்படியாக ஆட்சி அதிகாரத்தில் தலையிடத் தொடங்கினர். ஸ்டாலின், அழகிரி என்ற அளவோடு நின்றிருந்த கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம், படிப்படியாக பிறருக்கும் பரவி வியாபித்து, விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

ஆட்சி, அரசியல், சமுதாயம், அதிகாரம், திரையுலகம் என எல்லா பக்கங்களிலும் கருணாநிதி குடும்பத்தார் யாராவது ஒருவரின் ஆதிக்கம் வலுவாக இருந்ததால் யாருமே, இவர்களைத் தாண்டி, எதுவுமே செய்ய முடியாத நிலை. கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம், மிரட்டல், உருட்டல் என்று தலைவிரித்தாடியது.

இதைத் தடுக்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை அல்லது செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

இதுகுறித்தெல்லாம் புகார்கள் கிளம்பியபோதெல்லாம் தனது ஜால வார்த்தைகளாலும், தமிழ் திறமையாலும் சமாளித்தார் கருணாநிதி. அதை நிவர்த்தி செய்ய முயலாமல் தனது வார்த்தை ஜாலத்தால் தவிர்த்தாரே தவிர முற்றுப்புள்ளி வைக்க முயலவில்லை.

மக்களுக்குத் தேவை ஓட்டுப் போட காசு, அனுபவிக்க இலவச் திட்டங்கள், இவை மட்டும்தானே, இதைத்தான் நாம் கொடுத்து விட்டோமே என்று இறுமாப்புடன் திமுகவினர் பகிரங்கமாகவே சொல்லும் நிலை தமிழகத்தில் காணப்பட்டது. இந்த மாபெரும் தவறுகளால்தான் மக்கள் அதிமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கொடுத்துள்ளனர்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த திமுக, அதிமுக ஆட்சிகளைப் பார்த்தால் இரு தரப்புமே தாங்கள் செய்த தவறுகளால்தான் ஆட்சிகளை இழந்துள்ளார்களே தவிர மக்கள் மாற்றத்தை விரும்பியதால் ஆட்சிகளை இழக்கவில்லை என்பது தெரியும்.

கடந்த திமுக ஆட்சியிலிருந்து அதிமுகவும், அதன் ஆட்சியும் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இலவசங்கள் மட்டும் போதாது:

வெறும் இலவசத் திட்டங்கள் மட்டும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து விடாது என்பதை அதிமுக அரசு தெரிந்து கொள்ள வேண்டும். அவை தவிர மக்களின் சாதாரண நிலை அபவிருத்தி அடைய வகை செய்ய வேண்டும். மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை அதிமுக அரசு புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

குடும்ப அரசியல்:

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறிய கருணாநிதி தான் முதல்வராக இருக்கையில் எங்கும் என் குடும்பம், எதிலும் என் குடும்பம் என்ற கொள்கையை கடைபிடித்தார். இதுவும் தோல்விக்கான முக்கிய காரணம். சென்னையில் யார் ஒரு கோடிக்கு மேல் நிலம் விற்றாலோ, வாங்கினாலோ கருணாநிதி குடும்பத்தாருக்கு தெரிவித்தாக வேண்டும். அவர் குடும்பத்தார் விரும்பிய இடத்தையெல்லாம் உரிமையாளர்களுக்கு விற்க விருப்பம் இல்லாவிட்டாலும் விற்பனை செய்யத் தான் வேண்டும். இதனால் நிலம் வாங்க, விற்க மக்கள் அஞ்சினர்.

கருணாநிதியின் குடும்ப ஆட்சியால் மக்கள் கடு்ம் அதிருப்தி அடைந்து போயிருந்தனர். அதேபோன்ற நிலையை சசிகலா குடும்பத்தார் மூலம் ஜெயலலிதா கொண்டு வந்து விடக் கூடாது என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுவரை இல்லாத புதிய ஜெயலலிதாவைக் காண அவர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவர்கள் கவனத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர். எந்த ஒரு இடத்திலும் சசிகலா குடும்பத்தினரின் கை ஓங்குகிறது, ஆதிக்கம் காணப்படுகிறது என்ற குறை வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஜெயலலிதாவின் கடமையாகும்.

சட்டம் ஒழுங்கு:

முந்தைய ஆட்சியில் காவல் துறை என்று ஒரு துறை இருந்தும் குற்றவாளிகள் பயமில்லாமல் குற்றங்கள் புரிந்த காலம். கைது செய்தால் நான் ஆளுங்கட்சி என்று வெளியே வந்துவிடுவார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றங்கள் கணக்ககில் அடங்காமல் நடந்தது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டிருந்தது. மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் காவல்துறைக்கு அஞ்சாமல் மனம்போன போக்கில் நடந்தார்கள். அவர்களை எதிர்ப்பார் யாருமில்லை என்றிருந்தது. அவர்கள் வைத்ததே மதுரையில் சட்டமாக இருந்தது.

அழகிரிக்குத் தெரியாமல் ஒரு பியூனைக் கூட மதுரை பக்கம் மாற்ற முடியாது என்ற நிலை அப்போது இருந்தது. ஸ்டாலினுக்குத் தெரியாமல் வட தமிழகத்தில் ஒரு வடையைக் கூட விற்க முடியாது என்ற நிலை. கனிமொழி, ராசாத்தி அம்மாளின் கட்டுப்பாடுகளும் அமோகம். இவற்றையெல்லாம் சுத்தமாக இல்லாமல் செய்யும் வகையில், காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கையும், ஒப்படைக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனை:

இலங்கையில் அந்நாட்டு அரசு ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கையில் அப்போதைய தமிழக அரசு அதைத் தடு்கக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஈழப் பிரச்சனையை சுயலாபத்திற்காகத் தான் பயன்படுத்தியது. தமிழக்தில் தமிழர்கள் கொதித்தெழுந்து போராட்டங்கள் நடத்தியும் பலனில்லாமல் போனது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக முன்பு பலமுறை கருணாநிதி குரல் கொடுத்ததெல்லாம் கூட, போராட்டம் உச்சத்தில் இருந்தபோது அவர் போட்ட 'டிராமாக்களால்' அடிபட்டுப் போய் விட்டது. ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி என்ற பெயர்தான் அவருக்கு மிச்சம். எனவே, ஈழத் தமிழர் பிரச்சினையில் சுயநலம் பார்க்காமல், சுத்தமான மனதுடன் செயல்பட வேண்டியது ஜெயலலிதாவின் கடமையாகும்.

மீனவர்கள் பிரச்சனை:

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, கொலை செய்வது, அவர்கள் உடைமைகளை சேதப்படுத்துவதை இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மீனவர்கள் அலறியது அரசின் காதில் விழாமலே போனது. தேர்தல் நேரத்தில் மட்டும் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு லட்சக் கணக்கில் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கும் ஜெயலலிதா முக்கியத்துவம் தந்து அவர்களுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் ஏற்படுத்த வேண்டியது முக்கியமானது.

கடும் மின்பற்றாக்குறை:

திமுக அரசு தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளித்தது. அதை ஊக்குவித்தது. ஆனால் தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களை இருளில் வாடவிட்டது. திமுக அரசு தோற்றத்தற்கு மின் வெட்டும் ஒரு முக்கியமான காரணம் எனலாம். அதாவது முதலாளிகளை வாழ வைத்து அப்பாவி ஜனங்களை இருட்டடிப்பு செய்து விட்டார் கருணாநிதி என்ற பழிச்சொல்லை திமுக அரசு சம்பாதித்துக் கொண்டது. அந்த அவலத்தை ஜெயலலிதா அரசு சந்திக்காமல் தவிர்க்க வேண்டும். மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வர வேண்டும்.

சினிமா:

சினிமாத் துறையே கருணாநிதி குடும்பத்தார் பிடியில் தான் இருந்தது. அவர்களைக் கேட்காமல் எதுவும் நடக்காது என்ற நிலை இருந்தது. எதிர்த்தவர்கள் காணாமல்போனார்கள். ரெட்ஜெயின்ட், கிளவுட் 9, சன் பிக்சர்ஸ் தான் பிரதான தயாரிப்பாளர்கள். அவர்கள் கேட்டால் படத்தை கொடுத்துவிட வேண்டும். அவர்கள் விரும்பும் நடிகரை தலையில் வைத்து ஆடியதும், விரும்பாத நடிகரை படாதபாடு படுத்தியதும் உலகம் அறிந்ததே.

அதேபோல சினிமாத்துறையினரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய திமுகவின் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டோரும் நிறைய. நடிகர், நடிகைகளை சகட்டு மேனிக்கு கோபாலபுரம் வீட்டுக்குள்ளும், தலைமைச் செயலகத்திற்குள்ளும் நுழைய அனுமதித்து தமிழக மக்களை காமெடியர்களாக ஆக்கியது திமுக ஆட்சி. திரைத்துறையினருக்கு அளவுக்கு அதிகமாக சலுகைகளைக் கொடுத்தும், அவர்களை வளைத்து வைத்தும் தமிழக மக்களை கிட்டத்தட்ட அவமதிப்புக்குள்ளாக்கியது முந்தைய தமிழக அரசு. அந்த நிலையை அதிமுக ஆட்சி கொண்டு வந்து விடக் கூடாது.

விலைவாசி உயர்வு:

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கண்பிதுங்கிய போது அரசு கண்டுகொள்ளவில்லை. சாக்குபோக்கு கூறி விலைவாசி உயர்வை நியாயப்படுத்தியது. விலைவாசி உயர்வைக் கண்டித்து மற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதை உதாசினப்படுத்தியது.

நதி நீர்ப் பிரச்சினைகள்:

நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இன்னொரு பெரும் குற்றச்சாட்டு. குறிப்பாக முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு பிரச்சினைகளில் திமுக அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது மக்களின் அதிருப்தியாகும். அதேபோல ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, எடியூரப்பாவுடன் ரகசிய பேச்சு நடத்தி முடக்கிப் போட்டு விட்டது திமுக அரசு என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதில் எல்லாம் சுமூகத் தீர்வு காண அதிமுக அரசு முயல வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

வெட்டிச் செலவுகளுக்கு விடை கொடுப்போம்:

கடந்த திமுக ஆட்சியின்போது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது படோடபமாக, தாம் தூம் என்றுதான் நடக்கும். அப்படிப்பட்ட காட்சிகளை இப்போதைய அதிமுக ஆட்சியில் காண முடியவில்லை. அது ஆரோக்கியமானதாக இருக்கிறது. அதேபோல பல்வேறு பாராட்டு விழாக்களில்தான் முதல்வராக இருந்த கருணாநிதி அதிகம் கலந்து கொண்டார். அவற்றையும் இப்போதைய ஆட்சியில் காண முடியவில்லை. இதெல்லாம் கூட ஆரோக்கியமானதுதான். இதுதொடர வேண்டும்.

இப்படி கடந்த கால திமுக அரசு செய்த தவறுகளைப் பார்த்து அதை திரும்பச் செய்து விடாமல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செய்ய வேண்டும் என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம், கடந்த அரசு அமல்படுத்திய உண்மையிலேயே மக்களுக்கு உதவக் கூடியதாக இருந்த திட்டங்களை தூக்கிப் போட்டு விடாமல், அதை அப்படியோ அல்லது மேம்படுத்தியோ அமலாக்கினால் உண்மையிலேயே மக்கள் மகிழ்வார்கள். மறுபடியும் மாற்றம் தேவை என்ற எண்ணத்திற்குப் போக மாட்டார்கள்.
 
Thats tamil

No comments:

Post a Comment