Thursday, June 16, 2011

சாதனை: படிப்புதான் உயிர்...வாழ்க்கை... உலகம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இரவுப் பணிக்கு மட்டுமே போய்க் கொண்டு இருக்கிறார். எதற்காக என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். தன்னுடைய இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக.

ஏனென்றால் மகன்கள் இருவரும் பார்வையற்றவர்கள். பார்வையற்ற தன் இரு மகன்களுக்கும் கல்விக் கண் கொடுப்பதற்காக அவர்களுடைய தந்தை ராஜன் படும்பாடுகளில் ஒன்றுதான், இந்த இரவு நேரப் பணி.

இதில் மிகவும் மகிழ்ச்சியடைக்கூடிய விஷயம் என்னவென்றால், அவருடைய மூத்த மகன் ஜெயப்பிரகாஷ் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 1117 மதிப்பெண்கள் எடுத்துப் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியிருக்கிறார்.

இதற்காகத்தானே இப்படிக் கஷ்டப்படுகிறேன் என்று மகிழ்ச்சியால் உருகி கண்களில் நீர் வழியப் பேசுகிறார் ராஜன்.

""எனது முதல் மகன் ஜெயப்பிரகாஷ் பிறந்து ஓரு மாதத்திலேயே தெரிந்துவிட்டது அவனுக்குப் பார்வை வராதென்று. இருந்தும் நான் மனம் தளரவில்லை. வேலையை நம்பி பிழைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் எனக்கு, இப்படிக் குறைபாடுள்ள குழந்தை பிறந்துவிட்டதே என்ற வருத்தம். இருந்தாலும், இந்தப் பையனை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற உறுதியும் எனக்கு இருந்தது. அதற்குப் பின்பு சில வருடங்கள் கழித்து இரண்டாவது மகன் குணசேகரன் பிறந்தான். அவனுக்கும் கண் பார்வை இல்லை. எனது சுமை இன்னும் அதிகமானது.

ஜெயப்பிரகாஷ் முதல் ஐந்து வகுப்புகளை சென்னை ஜெமினி மேம்பாலத்துக்கு அருகேயுள்ள லிட்டில் ஃப்ளவர் கான்வென்டில் படித்தான். என்னுடைய மனைவி எழிலரசிதான் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அடையாறில் உள்ள புனித லூயிஸ் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் அவனை ஆறாம் வகுப்பில் சேர்த்தேன். 6-7 வகுப்புகளில் படிக்கும்போது பள்ளியில் உள்ள விடுதியில் சேர்த்தேன். எனது இரண்டாவது மகனையும் அதே பள்ளியில் சேர்த்தபோது இரண்டு பிள்ளைகளையும் விடுதியில் விடுவது சரியில்லை என்பதால், இருவரையும் வீட்டிலிருந்து பள்ளிக்கு அனுப்ப முடிவு எடுத்தேன். எனது வீடு இருப்பது சென்னை முகப்பேரில். பள்ளி இருப்பதோ அடையாறில். இருபது கிலோ மீட்டர் தூரம். சென்னை நகரப் பஸ் நெரிசலில் நாள்தோறும் பார்வையற்ற இரு மகன்களையும் பஸ்ஸில் ஏற்றி, இறக்கி பள்ளிக்கு அழைத்துச் செல்வது முடியாத காரியம். காரோ, ஆட்டோவோ வாங்க வசதியில்லை. எனது டூ வீலரில் மகன்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம் என நினைத்தேன். ஆனால் பகலில் வேலைக்குச் சென்றால் இது எப்படி முடியும்? எனவே நான் வேலை செய்யும் டிப்போவில் மேலதிகாரிகளைக் கெஞ்சி எனக்கு ஒர்க் ஷாப் டூட்டி போடச் சொல்லிக் கேட்டேன். அப்போதுதான் இரவுப் பணி மட்டுமே செய்ய முடியும். அவர்களும் எனது நிலைக்குப் பரிதாபப்பட்டு உதவி செய்தனர். அதனால் கடந்த ஐந்தாண்டுகளாக இரவுப் பணி மட்டுமே செய்கிறேன்.

என்னதான் மழை பெய்தாலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் இருக்கமாட்டேன். பள்ளிக்கு ஒருநாள் கூட லீவு போடக் கூடாது என்பதில் நான் மட்டுமல்ல, என்னுடைய மகன்களும் உறுதியாக இருக்கிறார்கள். அதுபோல வெளியூரில் நடக்கும் எந்த விசேஷத்துக்கும் போகமாட்டேன். அப்படியே போனாலும் இரவு தங்க மாட்டேன். தங்கினால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாதே! பள்ளிக்கு லீவு போடாமல் வந்ததற்காக ஒவ்வோராண்டும் எனது மகன்கள் பள்ளியில் பரிசுகள் பெற்றிருக்கிறார்கள்'' என்கிறார் பெருமையாக.

""என்னைப் பொறுத்தவரை படிப்புதான் உயிர். படிப்புதான் வாழ்க்கை. படிப்புதான் உலகம். இதை எனது மகன்களுக்கு நான் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அதுமட்டுமல்ல, எனது வருமானம், ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு போன்ற குடும்ப கஷ்டங்களையும் சொல்லிக் கொண்டு இருப்பதால் அவர்களும் பொறுப்புணர்வுடன் படிக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் பத்தாம் வகுப்பு படிக்கும் போது 500 க்கு 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறினான். இப்போது பிளஸ் டூ வில் 1117 மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறான். இது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. நானும் எனது மனைவியும் படும் கஷ்டத்துக்கு கிடைத்த பலன் இது என்று நினைக்கிறேன்'' என்கிறார் நெகிழ்வுடன் ராஜன்.

ஜெயப்பிரகாஷின் அம்மா எழிலரசி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் மகனுக்குப் பாடம் சொல்லித் தந்தது அவர்தானாம்.

""நான் எனது பிள்ளைகளை ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். அப்போது பள்ளியில் ஓராண்டுகள் பிரெய்லி முறையில் படிப்பதற்கு எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் என் பிள்ளைகளுக்கு வீட்டில் என்னால் பாடம் சொல்லிக் கொடுக்க முடிந்தது. மூத்த மகன் ஜெயப்பிரகாஷ் 12 ஆம் வகுப்பு வந்தவுடன் அவன் நிறைய படிக்க வேண்டியிருந்தது. பிரெய்லிமுறையில் பாடப் புத்தகங்கள், நோட்ஸ்கள் இருந்தாலும் எல்லா மாணவர்களும் படிக்கக் கூடிய நோட்ஸ்களும் அவனுக்குத் தேவையாக இருந்தன. நான் அந்த நோட்ஸ்களைப் படித்துக் காண்பிப்பேன். அவன் அதை பிரெய்லி முறைப்படி எழுதிக் கொள்வான். நார்மல் மாணவர்கள் எடுக்கச் சிரமப்படுகிற மார்க்கை என் பையன் எடுக்கிறான் என்றால் அவனுக்குத் திறமையில்லாமல் முடியுமா? எங்கள் இரண்டாவது மகன் குணசேகரன் 9-ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்கிறான்'' என்கிறார் பெருமிதத்துடன்.

ஜெயப்பிரகாஷுக்கு இப்போது சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படிப்பதற்கு இடம் கிடைத்துவிட்டது. பி.ஏ. முடித்தவுடன் பி.எட். படித்து ஆசிரியராகப் போகிறேன் என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

உங்களைப் போல நிறைய மதிப்பெண்கள் எடுக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டோம்.

""நமக்கு என்று ஓர் எய்ம் வைத்துக் கொண்டு படிக்கணும். இவ்வளவு மார்க் எடுக்க வேண்டும் என்ற எய்ம் வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்த மார்க்கை எடுக்க முடியும். அப்படி எடுக்க முடியாவிட்டாலும் அந்த மார்க் அளவுக்குக் கிட்ட வரலாம். நினைத்த மார்க்கை காலாண்டுத் தேர்வில் எடுக்க முடியவில்லை என்றால் அதற்காக மனம் வருத்தப்படாமல், அரையாண்டு தேர்வில் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். வகுப்பில் மிகுந்த கவனத்துடன் பாடத்தைக் கேட்க வேண்டும். தெரிந்த பாடங்களைப் பிராக்ட்டீஸ் பண்ணிப் பார்க்க வேண்டும். தெரியாத பகுதிகளை ஆசிரியரிடம் கேட்க வேண்டும். பொழுதுபோக்கு நேரத்தைக் குறைத்து படிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்'' என்று ஒவ்வொரு சொல்லையும் ஏற்கனவே யோசித்து வைத்ததைப் போல மிகத் தெளிவாகப் பேசுகிறார் ஜெயப்பிரகாஷ்.

ஜெயப்பிரகாஷ் படிக்கும் பள்ளியின் முதல்வரும் வகுப்பாசிரியருமான சகோதரர் இன்னாசி ஆசீர், ""ஜெயப்பிரகாஷுக்கு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீûஸவிட படிப்பில்தான் அதிக ஆர்வம். பத்தாம் வகுப்பிலும் இவன்தான் முதல் மாணவனாக வந்தான். அதனால் 12 ஆம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று இவனுக்கும், இவனுடைய பெற்றோருக்கும் ஆசை. ரொம்ப டிஸிப்பிளின் ஆன மாணவன். ஜெயப்பிரகாஷ் நிறைய மதிப்பெண்கள் எடுத்ததற்கு அவனுடைய பெற்றோரின் ஒத்துழைப்பு மிக முக்கியமான காரணம். நானும் எங்கள் பள்ளி ஆசிரியர்களும் எடுத்த முயற்சிகளும் காரணம். இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்த எல்லா மாணவர்களும் பாஸôகிவிட்டனர்'' என்றார்.

No comments:

Post a Comment