Monday, June 20, 2011

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

(  நன்றி : இந்நேரம்.காம்)

''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''
''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்  பட்டு விட்டது!''
மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால்  அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக்  கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா?  காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு  வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே   தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும்  தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!

ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு  வராமல் திமுகவே மீண்டும்  ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு  அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல  வேண்டும்.

தமக்கு  காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே  போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம்  என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு  மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப்   படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன்  திரைப் படத்தை வெளியிட்டார்.

ரஜினிகாந்த்  என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள்  அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும்  பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள்  திரையில்  செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு  மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.

சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது!  இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத  பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!

ரஜினி நலம் பெறட்டும்! தமிழர் தம் நிலை உணரட்டும்!!

--
------------------------------------------------------------------------------------------------------------
இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம்...பாதுகாப்புக் கோருகிறேன்...

No comments:

Post a Comment