Saturday, June 25, 2011

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு-லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிகவினரால் பரபரப்பு


சென்னை: தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் மகன் பிரபாகரனுக்கு சீட் கொடுக்க மறுத்ததால், சென்னை லயோலா கல்லூரி முதல்வரை நேரில் சென்று மிரட்டியுள்ளனர் தேமுதிக நிர்வாகிகள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு கை நிறைய எம்.எல்.ஏக்கள் கிடைத்து விட்டதால் தேமுதிகவினர் ஆங்காங்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் தலைநகர் சென்னையில், இந்தியாவின் மிக முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான லயோலா கல்லூரிக்குள் புகுந்து, அந்தக் கல்லூரியின் முதல்வரையே மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் தேமுதிகவினர்.

விஜயகாந்த்துக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெயர் பிரபாகரன். இவரை விரைவில் சினிமாவில் ஹீரோவாக களம் இறக்க விஜயகாந்த் குடும்பம் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது.

வெறும் 585 மார்க் வாங்கிய பிரபாகரன்!

பிரபாகரன் சமீபத்தில்தான் பிளஸ்டூவைப் பாஸ் செய்தார். 1200 மார்க்குகளுக்கு வெறும் 585 மதிப்பெண்களையே அவர் பெற்றுள்ளார். அதாவது ஜஸ்ட் பாஸ்.

இந்த நிலையில் லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க விரும்பிய பிரபாகரனை, அவரது பெற்றோர் அங்கேயே சேர்க்க விண்ணப்பித்தனர். ஆனால் மிகவும் மோசமான மார்க் என்பதால் சீட் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் கல்லூரிக்கு விரைந்தனர். அங்கு முதல்வர் அருட்தந்தை ஜெயராஜை சந்தித்து ஏன் விஜயகாந்த் மகனுக்கு சீட் தரவில்லை. இதுகுறித்து அவரைத் தொடர்பு கொண்டு விளக்கமளியுங்கள் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் லயோலா கல்லூரி முதல்வர் அதிர்ச்சி அடைந்தார்.

லயோலா கல்லூரி வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இங்கு எத்தனையோ அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பெரும் புள்ளிகளின் பிள்ளைகள் படித்துள்ளனர், படித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை இப்படி ஒரு பிரச்சினையை லயோலா சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.

தேமுதிகவினர் மிரட்டிய விவகாரம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
 
 
Thatstamil

No comments:

Post a Comment