Monday, June 13, 2011

உண்ணாவிரதப்​பந்தலை எரித்து மதக்கலவரத்​தை உருவாக்க ஆர்எஸ்எஸ் சதி - ஷப்னம் ஹாஷ்மி

ராம்தேவ் தங்கியிருந்த உண்ணாவிரதப் பந்தலுக்குத் தீவைத்து எரித்து விட்டு கோத்ராவுக்கு பின்பு நடைபெற்ற கலவரத்தைப் போன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்த R.S.S. சதித்திட்டம் தீட்டியிருந்ததாக ஷப்னம் ஹாஷ்மி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். ஒரு இணையதளத்துக்கு பேட்டி அளிக்கும்போது ஷப்னம் இவ்வாறு கூறியுள்ளார்.

தனக்கு 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி காலை 3 மணிக்கு உண்ணாவிரதப் பந்தலை எரிக்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்ததாகவும் இந்தத் தகவல் அரசுக்கு தெரியவந்ததாலேயே உண்ணாவிரதத்துக்குத் தடை விதிக்கப்பட்டு ராம்தேவ் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஷப்னம் தெரிவித்துள்ளதாவது - ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை இன்னொரு குஜராத்தாக மாற்றத் திட்டமிட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியம். ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலை எரிப்பதன் மூலம் பெரியதொரு மதக்கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர்.அவர்கள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறியிருந்தால் வரலாறு ஒரு மிக மோசமான காலத்தைச் சந்தித்திருக்கும். அரசாங்கத்திற்கு இது அதிகாலை 1.30 மணிக்கு தெரிய வந்த பின்னரே ராம்தேவின் உண்ணாவிரதம் தடை செய்யப்பட்டது. எனவே, அரசு இது சம்பந்தமான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா என்றதற்கு, "எனக்கு கிடைத்த தகவல்கள் உறுதியானதும் நம்பகமானதும்தான்" என்று கூறிய ஷப்னம் அரசாங்கம்தான் இந்த விஷயத்தை விசாரணை செய்து மதச்சார்பின்மையை அழிக்க முயன்றவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.காவிப் பயங்கரவாதத்தைப் பற்றி நாங்கள் ஆரம்பத்தில் கூறியபோதும் இவ்வாறுதான் கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் அது அனைவருக்கும் தெரிந்தது எனக் குறிப்பிட்ட ஷப்னம் தனது 30 வருட சமூகப் பணியைப் பாதிக்கும் விதமாக எந்த ஒரு அடிப்படையற்ற செய்தியையும் தான் தெரிவிக்க மாட்டேன் எனக் கூறினார்.

இந்தியாவை முல்லாக்களிடமும் , பாபாக்களிடமும், சாதுக்களிடமும் ஒப்படைத்து இந்தியாவை மற்றொரு பாகிஸ்தானாக்கப் போகிறோமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஊடகங்கள் இந்த விசயத்தை மறைக்க முயன்றால் அது இந்தியாவின் ஜனநாயகத்திற்குச் செய்யும் பெரும் தீங்கு என்றும் அவர் எச்சரித்தார். ஷப்னம் ஹாஷ்மி டில்லியிலிருந்து செயல்படும் Act Now For Harmony and Democracy  ( ANHAD) என்ற மனித உரிமைக் குழுவின் தலைவராக இருக்கிறார்.

No comments:

Post a Comment