Sunday, June 26, 2011

எல்பிஜி விலை உயர்வை சமாளிக்க வரியைக் குறைக்கமுதல்வர்களுக்கு கடிதம் எழுதுகிறார் பிரணாப்

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க, மாநில அரசுகள் சிலிண்டர்கள் மீதான உள்ளூர் வரியைக் குறைக்குமாறு அறிவுறுத்தி விரைவில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதவுள்ளாராம்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ. 50 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்தி விட்டனர். இதனால் விலைவாசி கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது. பண வீக்கமும் விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் லாரி உரிமையாளர்களும் தங்களது சரக்கு கட்டணங்களை உயர்த்தி விட்டனர். ஸ்டிரைக் செய்யப் போவதாகவு்ம் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதையெல்லாம் பார்த்து அப்பாவி மக்கள் விழி பிதுங்கிப் போய் உட்கார்ந்துள்ளனர்.

இந்த நிலையில் எல்பிஜி விலை உயர்வை மக்கள் தாங்கும் வகையில், அதன் மீதான மாநில அரசுகளின் வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கவுள்ளது. வரியைக் குறைக்குமாறு கோரி மாநில முதல்வர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதவுள்ளாராம்.

அந்தக் கடிதத்தில் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியை நியாயப்படுத்தவுள்ள பிரணாப் அதற்கான அவசியத்தையும், அவசரத்தையும் விளக்கவுள்ளாராம். எனவே மாநில அரசுகள் தங்களது விற்பனை வரி அளவைக் குறைத்து இந்த விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பை சந்திக்காமல் பார்த்துக் கொள்ள உதவிட வேண்டும் என்று முதல்வர்களிடம் கோரிக்கை விடுக்கவுள்ளாராம் பிரணாப்.

விலை உயர்வால் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி கடும் அதிருப்தியும், எரிச்சலும் அடைந்துள்ளார். இப்போதுதான் முதல் முறையாக ஆட்சிக்கு வ்நதுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த விலை உயர்வு அறிவிப்பு அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக, சமையல் எரிவாயு மீதான விற்பனை வரியை வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மேற்கு வங்க மக்களுக்கு சிலிண்டர் மீதான விலை ரூ. 16 வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மமதாவை உதாரணம் காட்டி மற்ற மாநில அரசுகளும் இதேபோல செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தும் எனத் தெரிகிறது.
Thatstamil

No comments:

Post a Comment