Sunday, June 26, 2011

முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்

Yair Netanyahu
 
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, முஸ்லீம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் யாயிர் கூறுகையில், மரணத்தையும் துவேஷத்தையும் கொண்டாடுபவர்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளார். அத்தோடு நில்லாமல், தீவிரவாதத்திற்கு ஒரு மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்றும் விஷமத்தனமாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், பாலஸ்தீனம் ஒரு போதும் தனி நாடாக முடியாது என்றும் கூறியுள்ளார் இந்த யாயிர்.

யாயிரின் இந்த அவதூறு மற்றும் மத துவேஷ கருத்துக்களுக்கு பாலஸ்தீனியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யாயிர் இதுபோல இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும், அராபியர்களையும் வம்புக்கு இழுப்பது முதல் முறையல்ல. ஏற்கனவே 23 பேருடன் சேர்ந்து ஒரு குரூப்பை பேஸ்புக்கில் ஆரம்பித்த யாயிர், அரபு தொழில்களையும், உற்பத்திப் பொருட்களையும் யூதர்கள் புறக்கணிக்க வேண்டு்ம் என்று அறைகூவல் விடுத்தார்.

யாயிரின் இந்த அவதூறு கருத்துக்கள் குறித்த செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில், பேஸ்புக், யாசிரின் கருத்துக்களை நீக்கி விட்டது. இதுகுறித்து பெஞ்சமின் நதன்யஹூ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் அரசு வழக்கறிஞர் டேவிட் ஷிம்ரோன் கூறுகையில், இரு ஒரு இளைஞனின் கோபத்தால் எழுந்த வார்த்தைகள்தான். தற்போது அது நீக்கப்பட்டு விட்டது.

பிரதமர் நதன்யஹூவும், அவரது மனைவியும் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். மத பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் அவர்கள் மதிக்கிறார்கள். தங்களது பிள்ளைகளையும் அவர்கள் அப்படித்தான் வளர்த்தி வருகிறார்கள். ஏதோ கோபத்தில் யாயிர் அவ்வாறு எழுதி விட்டார். தற்போது அது பேஸ்புக்கில் இல்லை என்றார்.

பாலஸ்தீன செய்தித் தொடர்பாளர் ஹுசம் , ஸோம்லாட் கூறுகையில், தந்தையின் போதனையைத்தான் இப்போது மகன் வெளிப்படுத்தியுள்ளான். தனது குடும்பத்தை எப்படி வளர்த்து வருகிறார் நதன்யஹூ என்பது யாயிரின் பேச்சைப் பார்த்தாலே தெரிகிறது என்று கடுமையாக யாசிரையும், அவரது தந்தையையும் சாடியுள்ளார்.

இதற்கிடையே, யாயிரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், யாயிர் நதன்யஹூவுடன் ராணுவத் தளபதிகள் பேசியுள்ளனர். அப்போது யாயிரின் தவறு அவருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதுபோன்ற செயலில் ஒரு ராணுவ வீரர் ஈடுபடக் கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்சமின் நதன்யஹூ 1996 முதல் 99 வரை பிரதமராக இருந்தவர். பின்னர் பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரதமரானார். ஆரம்பத்தில் பாலஸ்தீன தனி நாட்டை ஆதரித்த அவர் தற்போது அது குறித்துப் பேசுவதே இல்லை. கிட்டத்தட்ட பாலஸ்தீன தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை அவர் முடக்கி வைத்துள்ளார். இந்த நிலையில்தான் அவரது மகன் இப்படி விஷமத்தனம் செய்து சர்ச்சையைப் பெரிதுபடுத்தியுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்புதான் யாயிர் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரை போர் முனைப் படைப் பிரிவில் சேர்க்காமல், அலுவலக வேலையில் மட்டுமே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Thatstamil

No comments:

Post a Comment