ஊழல் ஒழிப்பு, வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் மீட்பு உட்பட அதிரடிக் கோரிக்கைகளுடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது ஓர் உண்ணாவிரதப் போராட்டம்.
யோகா குருவான பாபா ராம்தேவுடைய முதல் கட்டப் போராட்டம் பாதியிலேயே முடிந்தாலும், நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது. ஆனால், அவருடைய போராட்டம் ஊழல் ஒழிப்பைவிடவும் அவரைப் பற்றிய விவாதங்களை அதிகம் உருவாக்கி இருப்பதுதான் வேடிக்கை!
ராம்தேவ் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது இது முதல் தடவை அல்ல! பதஞ்சலி மரபின் அடிப்படையில் யோகா பயிற்சியை முன்வைத்துக் கற்பிக்கும் ராம்தேவ், 100% வாக்குப்பதிவு, 100% தேசியம், 100% சுதேசி, 100% மக்கள் ஒற்றுமை, 100% யோகாவை மையப்படுத்திய தேசமே தன் கொள்கை எனப் பிரகடனப்படுத்தியவர், அவ்வப்போது அரசியல் சர்ச்சைகளிலும் சிக்குவார். மார்ச் 2005-ல் ராம் தேவுடைய 'திவ்ய யோக மந்திர்’ அறக் கட்டளையைச் சேர்ந்த 113 ஊழியர்கள், தங்களுக்குக் குறைந்த அளவே ஊழியம் வழங்கப்படுவதாகப் போராட்டத்தில் குதித்தனர். ஓரளவுக்கு ஊழியர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டாலும், போராட்டத்தை வழி நடத்திய முக்கியமான ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அண்ணா ஹஜாரேவின் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, ராம்தேவும் போராட்டத்தில் குதித்தார். காந்திய வழியில் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தின் செலவு மட்டும் திக் விஜய் சிங்கின் குற்றச்சாட்டுகள் காங்கிரஸைக் காப்பாற்றுவதற்காகவே சொல்லப்படுபவை என்றாலும், ராம்தேவுக்கு உள்ள கோடிக்கணக்கான சொத்துகள், மதவாத சக்திகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் ஆகியவை அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் அல்ல; ராம்தேவுக்கு அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலம் இருப்பதாக வும் ஸ்காட்லாண்டில் தனித் தீவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், கறுப்புப் பணத் தைப் பற்றிப் பேசும் அதே வேளையில், எந்த உழைப்பிலும் உற்பத்தியிலும் ஈடுபடாத இத்தகைய கார்ப்பரேட் சாமியார்களிடம் கோடிக்கணக்கில் பணம் குவிவதுபற்றியும் பேசித்தான் ஆக வேண்டும்!
மணிப்பூரில் 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடிவரும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கும் ஈழத்தில் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகத்தில் நடைபெற்ற தீக்குளிப்புப் போராட்டங்களுக்கும் கிடைக்காத முக்கியத்துவம், இத்தகைய 'ஊழல் எதிர்ப்பு போராட்ட’ங் களுக்கு மட்டும் ஏன் கிடைக்கிறது என்பதும் ஆராயப்பட வேண்டிய, மிக முக்கியமான ஒன்றே!

No comments:
Post a Comment