Tuesday, June 21, 2011

தமிழக அரசுக்கு தாய்மார்களின் அன்பு வேண்டுகோள்

தாலிக்குத் தங்கம், வீட்டுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, சமைப்பதற்கு இருபது கிலோ  அரிசி எனப் பல இலவசங்களை எங்களுக்கு வழங்கவிருப்பதாகத் தமிழக அரசு வாக்களித்துள்ளது; வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கையும் எடுத்துவருகிறது.
இந்த எல்லா இலவசங்களும் உண்மையிலேயே எங்கள் குடும்பங்களுக்குப் பயனளிக்க வேண்டுமானால், டாஸ்மாக் கடைகளை முதலில் இழுத்து மூட வேண்டும்; இல்லையேல், எங்கள் வீட்டு ஆண்கள் தங்கத்தை அடைமானம் வைத்துவிட்டுக் குடித்தே குடும்பத்தை அழித்துவிடுவார்கள். மிக்ஸி, கிரைண்டரை விற்கவும் தயங்கமாட்டார்கள். உலையில் போட்ட இலவச அரிசியைக்கூட விற்றுவிட்டு, குடித்து அழிந்துபோவார்கள்.
இது தாய்மார்களின் ஏக்கம் மட்டுமல்ல; நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள் ஆகியோரின் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகும். மதுவால் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவருவது கண்கூடு.
உலகச் சுகாதார மையம் 2011 பிப்ரவரியில் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. உலகில் பருவமடைந்தோரில் 55 சதவீதம்பேர் மது அருந்துகின்றனர். குடிப்பழக்கத்தால் 230 வகையான நோய்கள் உண்டாகின்றன. இந்நோய்களின் காரணத்தால் ஆண்டுக்கு 2.5 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர்.
ஆல்கஹால் கலந்த மது வகைகளாகட்டும்! பீர் போன்ற பானங்களாகட்டும்! எல்லாமே உயிரைப் பறிக்கும் விஷங்கள்தான் என அந்த அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. தனிமனிதன் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உலக அளவில் மிகப்பெரிய தடையாக இருப்பது குடிதான் என்கிறது உலக அறிக்கை.
குடிகாரர்களுக்கு மட்டும் கேடல்ல; குடிக்காத நல்லவர்களும் குடிகாரர்களால் பல்வேறு இழப்புகளைச் சந்திக்கிறார்கள். குடிகாரர்களின் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன், சம்பந்தமே இல்லாத மற்ற மனிதர்களுக்கும் குடிகாரர்களால் பாதிப்புதான். குடிகார ஓட்டுநர்களால் சாலையில் செல்லும் அப்பாவிகள் அநியாயமாக உயிரிழக்கின்றனர்.
உலக மக்களின் வருவாயில் 3.3 சதவீதம் மதுவால் அழிகிறது. அந்த வருமானத்தை நம்பியுள்ள மக்கள் அழுகிறார்கள். பிரிட்டன் பேராசிரியர் டேவிட் நாத் கூறுகிறார்: லண்டனில் நடக்கும் கற்பழிப்புகளில் 35 சதவீதம் குடிகாரர்களால் நிகழ்கிறது. குற்றவியல் பேராசிரியர் ஸ்டான்கோ கூறுகிறார்: குற்றச் செயல்களில் மூன்றில் ஒரு பங்கு குடியால் நடக்கிறது.
1991ஆம் ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் நடந்த கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஆண்களில் 55 சதவீதம்பேரும் பெண்களில் 51 சதவீதம்பேரும் குடித்திருந்தனர். கலிபோர்னியா பல்கலைக் கழகம் 2004ஆம் ஆண்டில் நடத்திய ஓர் ஆய்வில், கற்பழிப்பில் ஈடுபட்ட ஆண்களில் 75 சதவீதம் பேரும் பெண்களில் 55 சதவீதம் பேரும் மது அருந்தியிருந்தனர் என்று கண்டறியப்பட்டது.
நமக்குத் தெரிந்த வரை உலகில் சஊதி, குவைத், கத்தார், சூடான் ஆகிய நாடுகளில் மட்டுமே முழு மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. அவ்வாறே சஊதி ஏர்லைன்ஸ், குவைத் ஏர்லைன்ஸ், எகிப்து ஆகிய விமானங்களில் மட்டுமே பயணிகளுக்கு மது வகைகள் வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பீர் மற்றும் அந்நிய மதுபானங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகின்றன. 2007ஆம் ஆண்டு 15.8 கோடி லிட்டராக இருந்த பீர் உற்பத்தி, 2010ஆம் ஆண்டு 18.66 கோடி லிட்டராக உயந்திருக்கிறது. அதேபோல, 2007ஆம் ஆண்டு 27 கோடி லிட்டராக இருந்த அந்நிய மதுபான உற்பத்தி, 2010ல் 36.66 கோடி லிட்டராக வளர்ந்திருக்கிறது.
சிலர், பீர் மதுபானம் அல்ல என்று சொல்லிக்கொண்டு குடித்துக் கும்மாளம் போடுகின்றனர். உண்மை அதுவல்ல. பொதுவாக, பீர் வகை பானங்களில் 5 சதவீதம் அளவுக்கு ஆல்கஹால் சேர்க்கப்படுவதுண்டு. ஆனால், இந்தியாவில் 8 முதல் 15 சதவீத அளவுக்கு ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. எனவே, அந்நிய மதுபானங்களில் கிடைக்கும் அதே போதை, இந்திய பீர் வகைகளில் கிடைக்கிறதாம்!
அது மட்டுமன்றி, பீர் என்று தொடங்கி, பாரே கதியாக மாறிவிடும் இளவல்கள் ஏராளம். பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள்வரை எல்லாரிடமும் மதுப் பழக்கம் சர்வ சாதாரணமாகிவிட்டது. நண்பர்கள்கூடி நடத்தும் பார்ட்டிகளில் மது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. மது அருந்துவது ஒரு சமூகத் தகுதியாகக் கருதப்படும் அவலம் இங்கும் வந்துவிட்டது. குடிக்காதவன் வாழத் தகுதியற்றவன் எனும் கண்ணோட்டம் பரவத் தொடங்கிவிட்டது.
நாட்டில் மூலைக்கு மூலை மதுக் கடைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளுக்கு விடுமுறை என்பதே கிடையாது. பண்டிகை காலங்களில் மது விற்பனை பன்மடங்காக அதிகரிக்கிறது. எப்போதும் மதுக்கடைகளில் மக்கள் கூட்டம். சிறுவர்கூடக் கொஞ்சமும் கூச்சமோ அச்சமோ இல்லாமல் மது பாட்டில்களை வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு, ஒதுக்குப்புறங்களில்கூட ஒதுங்காமல், பிரதான சாலைகளிலேயே காருக்குள்ளும் ஆட்டோவுக்குள்ளும் உட்கார்ந்துகொண்டு குடிக்கும் காட்சி பெற்றோரைக் கதி கலங்கச் செய்கிறது.
இது எங்குபோய் முடியும்? ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக, எதிர்காலத் தலைமுறையினரை முளையிலேயே கிள்ளி எறியலாமா? சம்பாதிக்கவும் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு, மனைவி வேலை செய்து கொண்டுவரும் பணத்தைப் பறித்துச் சென்று டாஸ்மாக் கடையில் விழுந்துகிடக்கும் ஆண்களால், மனைவி மக்களின் எதிர்காலக் கனவு மட்டுமல்ல; நிகழ்கால நனவே பட்டுப்போக விடலாமா?
தாய்மார்கள் கெஞ்சுகிறார்கள்; கதறுகிறார்கள்; அரற்றுகிறார்கள்; அழுகிறார்கள். இறுதியில் ஒன்றும் முடியாதபோது கவலையை மறக்க டாஸ்மாக் பக்கம் செல்லத் தொடங்கிவிடுகிறார்கள்.
இந்த அவலத்தை அகற்ற ஒரே வழி, மது விலக்குத்தான். உடனடியாக ஒரே மூச்சில் முழு மதுவிலக்கைக் கொண்டுவருவது அரசுக்குச் சிக்கல்களைத் தரும் என்று அஞ்சினால், படிப்படியாக மதுவிலக்கைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் அரசும் அரசை நடத்தும் அமைச்சர்களும் பொதுமக்களின், குறிப்பாகத் தாய்மார்களின் வாழ்த்துக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கும் ஆளாவார்கள் என்பதில் ஐயமில்லை.
- கான் பாகவி
 http://www.tmmk.info/

No comments:

Post a Comment