Friday, March 4, 2011

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதி்மன்றம் சம்மன்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதி்மன்றம் சம்மன்

நியுயார்க்,மார்ச்.3: 1984 நவம்பரில் இந்தியாவில் சீக்கிய சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சீக்கியர்களுக்கான நீதி(எஸ்எஃப்ஜே) என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நியுயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த எஸ்எஃப்ஜே அமைப்பில் 1984 கலவரங்களில் உயிர் பிழைத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் மட்டும் நவம்பர் 1984-ல் சீக்கியர்களின் படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தது என எஸ்எஃப்ஜேவின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பான்னன் தெரிவித்தார்.

இந்திய அரசின் ஆவணங்களின்படி 3296 சீக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 35,535 பேருக்கு காயங்களும், உயிரிழப்பும் ஏற்பட்டது என அவர் கூறினார்.

ஆனால் இந்த தாக்குதல்களின் நோக்கம், கடுமை போன்றவற்றை சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் என்ற அளவில் இந்திய அரசுகள் மூடிமறைத்துவிட்டன என பான்னன் குற்றம்சாட்டினார்.

இந்த தாக்குதல்கள் கலவரங்களோ அல்லது டெல்லியில் மட்டும் நடந்ததோ அல்ல. உண்மையில் நவம்பர் 1984-ல் 18 மாநிலங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டனர். இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மாநகரங்களில் ஒரே மாதிரியான முறையில் இந்த தாக்குதல்கள் நடந்தன. இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன என அவர் குற்றம்சாட்டினார்.

இனப் படுகொலைக்கு எதிரான அமெரிக்க தண்டனைச் சட்டத்தின் பிரிவு 2-ன் படி சீக்கியர்களுக்கு எதிரான இந்த இனப் படுகொலைக்கு அப்போது ஆட்சியில் இருந்த இந்திய நேஷனல் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment