Friday, March 4, 2011

வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு சீன அதிகாரிகள் மிரட்டல்

பீஜிங்,மார்ச்.4:சீனாவில் பணியாற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லக்கூடாது எனவும், தடையை மீறினால் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் எனவும் சீன போலீஸார் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அரபு நாடுகளில் நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் உத்வேகம் பெற்ற சிலர் சீனாவில் இணையதளம் ஆன்லைன் மூலமாக போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து வருகின்றனர்.ஆனால், போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்ட இடங்களுக்கு எவரும் வருகை தரவில்லை. எனினும், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தப்போவதாக ஆன்லைனில் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்தான் சீனா போலீசார் அசோசியேட் பிரஸ், பிரான்சு பிரஸ் ஏஜன்சி உள்பட பல்வேறு வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்தனர்.

போராட்டம் நடக்குமென கருதப்படும் பீஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் காட்சிகளை பதிவுச் செய்யும், பேட்டியெடுக்கும் பத்திரிகையாளர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது.

2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் பத்திரிகையாளர்களுக்கு சீனா வழங்கிய சுதந்திரம் இத்துடன் மீண்டும் கட்டுப்பாட்டைநோக்கி செல்வதாக கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment