Monday, March 7, 2011

சவூதியில் போராட்டம் நடத்த தடை

சவூதியில் போராட்டம் நடத்த தடை

ரியாத்,மார்ச்.6:சவூதி அரேபியாவில் அரசுக்கெதிரான போராட்டங்கள், கூட்டத்தை நடத்துவது, பேரணிகள் ஆகியவற்றுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

அரசுக்கெதிரான போராட்டங்கள் நடத்துவது சட்டவிரோதமாகும். எவரேனும் சட்டத்தை மீறினால் அவர்களுக்கெதிராக தேவைப்பட்டால் நடவடிக்கைகள் மேற்கொள்ள சட்டம் அனுமதியளித்துள்ளது. என சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ரியாத் மற்றும் சவூதி அரேபியாவின் சில நகரங்களில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றன.

ரியாத்தில் நூற்றுக்கணக்கானோர் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

ரியாதின் கிழக்குப் பகுதியிலுள்ள அல் ராஜி மஸ்ஜிதிற்கு முன்பாக கூடிய மக்கள் மன்னராட்சிக்கெதிராகவும், ஊழலுக்கெதிராகவும் கோஷம் எழுப்பினர். கோஷமிட்ட 3 நபர்களை போலீசார் கைது செய்ததாக நேரடியாக பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வேளையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அல் ஹுதுஃப், அல் அஹ்ஸா, அல் காதிஃப் ஆகிய பகுதிகளிலும் ஷியா அறிஞர் உள்பட அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி பேரணிகள் நடத்தப்பட்டன.

அல் ஹுதுஃபில் நடந்த அமைதியான பேரணியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ஷேக் தவ்ஃபீக் அல் அமீரை விடுவிக்கக் கோரிக்கை எழுப்பப்பட்டது.

அல் காதிஃபில் நடந்த சிறிய அளவிலான போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சவூதியில் ஒரு மஸ்ஜிதில் உரை நிகழ்த்திய ஷியா அறிஞர் ஒருவர் சவூதி அரேபியா அரசியல் சட்டத்தைக் கொண்ட நாடாக மாறும் என கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

வருகிற மார்ச் 20-ஆம் தேதி ஃபேஸ் புக் சமூக இணையதளம் மூலம் 'சவூதி புரட்சி'க்கு அழைப்பு விடுத்துள்ளனர் சில சவூதி இளைஞர்கள். இதில் ஜனநாயக, அரசியல் சீர்திருத்தத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இன்னொரு ஃபேஸ் புக் குழுமத்தில் மார்ச் 11-ஆம் தேதி 'கோபத்தின் நாள்' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்குழமத்தில் 17 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சவூதிஅரேபிய அரசு நாட்டின் வடகிழக்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான கலவரத் தடுப்பு படையினரை அனுப்பியுள்ளது.

செய்தி:ப்ரஸ் டி.வி

No comments:

Post a Comment